மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை அனைத்து கிராம மக்கள் முற்றுகை


மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை அனைத்து கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 April 2018 3:52 AM IST (Updated: 24 April 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அனைத்து கிராம மக்கள் பேரணியாக சென்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் நேற்று 71-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதே போன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி நகர்ப்புறம் உள்பட மொத்தம் 15 இடங்களில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து கிராம மக்கள் மடத்தூருக்கு வரத்தொடங்கினர். ஒவ்வொரு கிராமமாக கருப்பு கொடியேந்தியும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், முகத்தில் முகமூடி அணிந்தபடியும் வேன்களில் வந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி மடத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே பெண்கள் உள்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து அனைத்து கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர். இந்தபேரணி மடத்தூரில் இருந்து சிப்காட் வளாகம் வழியாக, அங்கு அமைந்து உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே சென்றடைந்தது. அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு சில மீட்டர் தூரத்தில் பேரணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய நிர்வாகிகளை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர்.

அப்போது பேரணியில் பங்கேற்ற ஒவ்வொரு கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மனு கொடுக்க சென்றனர். சுமார் 50 பேர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி மனு கொடுப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் கண்ணன் அலுவலகத்தின் வாசலில் வந்து மனுவை பெற்றுக் கொண்டார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடியில் 1996-ம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலையால் சிப்காட்டை சுற்றி உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், சிறுநீரக கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பாதிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் இறந்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகிவிட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனிமேலும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டால் நாங்கள் ஊரை காலி செய்து விட்டு அகதிகளாக வாழும் சூழ்நிலை உருவாகும்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தாமிரம் உற்பத்தி செய்யப்படும் போது, கந்தகடை ஆக்ஸைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகிறது. இதனால் காற்று மிகவும் மாசுபடுகிறது. அதில் இருந்து வெளியாகும் திடக்கழிவுகளால் நிலங்கள் மாசுப்பட்டு வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை மீறி செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்குவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன்படி மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்ட கடமையாகும். ஆகையால் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்து வரும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைப்பிரிவு 133-ன் கீழ் நிரந்தரமாக மூடி தூத்துக்குடி சிப்காட்டை விட்டு உடனே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் கண்ணன், மனு மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பினர் சிப்காட் போலீஸ் நிலையத்திலும் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் மனு கொடுத்த விவரத்தை பொதுமக்களிடம் விளக்கி கூறினர். அதன்பிறகு மக்கள் சிறிது நேரம் அங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story