தலைவாசல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி


தலைவாசல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி
x
தினத்தந்தி 23 April 2018 11:19 PM GMT (Updated: 2018-04-24T04:49:21+05:30)

தலைவாசல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைவாசல்,

தலைவாசல் அருகே புளியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்தார். தற்போது கோடை காலம் என்பதால் இரவில், மாணவி வீட்டின் முன்புள்ள முற்றத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த மஞ்சப்பன் என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 25) குடிபோதையில் அங்கு வந்தார். அவர் தூங்கி கொண்டிருந்த மாணவியை வாயில் துணியை வைத்து பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அருகில் இருந்த வேப்ப மரத்தில் ஏறினார். வாலிபர்கள் சிலர் மரத்தில் ஏறி அவரை கீழே இறக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அங்கு கூடிய பொதுமக்கள் வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீரகனூர் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான ராஜ்குமார் மீது வீரகனூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு பாலியல் புகார்கள் இருப்பதால் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story