தமிழ் வளர்த்த ஜி.யு.போப்


தமிழ் வளர்த்த ஜி.யு.போப்
x
தினத்தந்தி 24 April 2018 12:30 PM IST (Updated: 24 April 2018 12:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான டாக்டர் ஜி.யு.போப் கனடா நாட்டுக்கு அருகில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி பிறந்தார்.

ஜி.யு.போப்பின் முழுப்பெயர் ஜார்ஜ் உக்ளோ போப் என்பதாகும். தந்தை பெயர் ஜான் போப். தாயார் கேதரின். தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்தபோது அங்கு போப் பிறந்தார். போப்புக்கு 6 வயதானபோது பெற்றோருடன் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

சிறு வயதிலேயே கிறிஸ்தவ சமயப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கிறிஸ்தவ சமயப்பணிக்காக 1839-ம் ஆண்டில் அவரை தென்இந்தியாவுக்கு கிறிஸ்தவ திருச்சபை அனுப்பி வைத்தது. தூத்துக்குடி அருகே சிறு கிராமமாக இருந்த சாயர்புரத்தில் குடியேறினார். கிறிஸ்தவ சமயப் பணியாற்றியதுடன் கல்வி சாலை அமையவும், நூல் நிலையம் உருவாகவும் பாடுபட்டார்.

அங்கு தமிழ் தவிர தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்று தேர்ந்தார். 1849-ல் இங்கிலாந்துக்கு சென்றார்.

பின்னர் தமிழகத்திற்கு திரும்பி தஞ்சாவூரில் தங்கினார். அங்கு சமயப்பணியை தொடர்ந்தார். தொல்காப்பியம், நன்நூல் போன்ற நூல்களை மாணவர்கள் கற்பதற்கு கடினமாக இருந்ததால், எளிய தமிழில் இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார். திருக்குறள் ஆங்கில பதிப்பு முன்னுரையில் தமிழின் சிறப்பு பற்றி ஜி.யு.போப் பின்வருமாறு கூறுகிறார்.

‘தமிழ்மொழி பண்பட்ட மொழி. சொற்செல்வம் படைத்த தனிமொழி. தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் அது தாய்மொழி. தமிழ் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநிலையையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை. அதற்கோர் எடுத்துக்காட்டு திருக்குறள். உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கத்தையும் காணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில் தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும். உருவாக இயலும். அழுக்கு இல்லாத தூய நீரூற்றுப் போல திருக்குறள் தோற்றம் தருகிறது. ஆம், உலகின் அழுக்கினை போக்க வந்த உயர்தனித் திருநூல் திருக்குறள்’ என்று போப் கூறியுள்ளார்.

இது தமிழர் மீதுள்ள அவரின் தணியாத காதலை எடுத்து காட்டுகிறது. சமயப்பணிக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்த போப் சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி ஆற்றி தமிழ்த் தொண்டராகவே மாறிவிட்டார்.

தஞ்சையிலிருந்து ஊட்டிக்குச் சென்று வாழ்ந்த போப் இந்திய நாட்டு வரலாறு பற்றி இரண்டு நூல்களை வெளியிட்டார். 1871-ல் பெங்களூரு சென்று அங்கு கல்விப் பணியும், சமயப் பணியும் ஆற்றினார்.

42 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த போப் 1882-ம் ஆண்டு தனது 62-வது வயதில் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். 1885-ல் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு மாணவர்களுக்குத் தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.

போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசக நூல் அவருடைய 80-வது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. அவருடைய இறுதி விருப்பம் அவருடைய எல்லையில்லாத தமிழ் பற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.

‘நான் இறந்த பின் என் கல்லறையில் தமிழ் மாணவன் என்று குறிப்பிட வேண்டும். என் கல்லறையை அமைப்பதற்கு ஆகும் செலவில் ஒரு பகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையாக அமைய வேண்டும்’ என்று தன் விருப்பத்தை எழுதி வைத்தார்.

பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து தமிழ்த்தாயின் தவப்புதல்வரான ஜி.யு.போப் 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி காலமானார்.

அவருடைய விருப்பப்படியே அவர் கல்லறையை அமைக்க பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வ கேசவராய முதலியார் தமிழர்களிடம் நன்கொடை வசூலித்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார். ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் ஒரு மரத்தடியில் சலவைக்கல்லால் ஆன போப் கல்லறை உள்ளது. அதில் பொறிக்கப்பட்டு உள்ள ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம் வருமாறு:-

தென்னிந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் உக்ளோ போப் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளை போதிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். மொழிக்காகவும், சமயப்பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது.

இவ்வாறு அந்த வாசகம் அமைந்தது.

தமிழாய்ந்த தமிழ் மகனின் புகழ் தமிழ் உள்ளளவும் வாழ்க!

இன்று (ஏப்ரல் 24-ந்தேதி) ஜி.யு.போப் பிறந்த நாள்.

- ஆசிரியை சுபா அருள்செல்வம்

Next Story