பழங்கலைகளின் புதையல் சிலப்பதிகாரம்


பழங்கலைகளின் புதையல் சிலப்பதிகாரம்
x
தினத்தந்தி 24 April 2018 12:58 PM IST (Updated: 24 April 2018 12:58 PM IST)
t-max-icont-min-icon

இன்று (ஏப்ரல் 24-ந்தேதி) இளங்கோவடிகள் திருநாள்.

சிலப்பதிகாரம் ஈடு இணையற்ற முத்தமிழ் காப்பியம். இயல், இசை, நாடகம் பின்னிப்பிணைந்த பெருங்காப்பியம். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் சேர நாட்டு இளவரசர். சிலப்பதிகாரத்தில் அவர் துறவுபூண்ட கதையும் வருகிறது. முத்தமிழ், மூவேந்தர், மூன்று நீதிகள், மூன்று தலைநகரங்கள், மூன்று நகரங்களின் பெயர்களிலும் மூன்று எழுத்துகள், மூன்று காண்டங்கள், முதன்மை பெற்ற கதை மாந்தர்கள் மூவர், மூன்று பத்துக் காதைகள் எனப் பொருளாலும், புனைவுகளாலும், வடிவாலும், வனப்பாலும் சிலப்பதிகாரத்தைப் புதுமையாகப் புனைந்தார்.

சேர இளவரசர் ஆனாலும் மூவேந்தர் மூவர்க்கும் உரியதாகப் பொதுமை பொலிந்த இலக்கியமாகச் செய்தார். நாடாளும் அரச மரபினர் கவிதை புனைவதைப் போலவே, கற்றறிந்த கலைக்களஞ்சியமாகவும் துறவு வாழ்க்கையில் வாழ்ந்திருக்கிறார்.

ஆடற்கலை, இசைக்கலை, அழகுக்கலை, கட்டிடக்கலை, வணிகக்கலை என்று அனைத்து கலைகளையும் நுண்மையாக அறிந்து பண்பாட்டு புதையலாகச் சிலப்பதிகாரக் காவியத்தை படைத்தார்.

பூம்புகாரின் அழகையும், மதுரையின் மதில் அழகையும், வீதியழகையும், வணிக மாட்சியையும் சேர நாட்டு வேந்தன் இமயத்தை நோக்கிச் செல்லும் பெருமிதத்தையும், நாடுகள், நகரங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், வேந்தர்கள் எனச் சிலவற்றை அடுக்கிச் சொல்வதிலும் அடிகள் ஈடில்லாதவர்.

வணிகனென்ற நிலையில் கோவலனின் மனப்பாங்குக்குப் பொருந்தக் கண்ணகியின் அழகைப் புகழும் போது, ‘மலையிடைப் பிறவா மணியே!’ ‘மாசறு பொன்னே’ என்றும் கூறுகிறான்.

பூம்புகார் வீதிப் பெருமையைச் சொல்லும் போது காண்பவரைக் கவர்ந்து நிற்கும் யவனர் இருக்கையும் மிளிர்ந்துள்ளது.

மாதவி குளித்தெழுந்த பங்கயத் தடாகத்தில் ஊறி மிதந்த 32 வகை நறுமணப் பொருள்களையும், சேரர் செம்மல் இளங்கோவடிகள் புலமை மிகுந்த வரிகளில் பட்டியலிட்டுப் படம் பிடிக்கின்றார். இருபதுக்கு மேற்பட்ட பொன்னகைகள் பொலியும் புன்னகை அரசியாக மாதவியை நம்முன் நிறுத்துகிறார்.

சிலப்பதிகாரம் மட்டும் ஆங்கிலப் புலவர்களுக்குக் கிடைத்திருந்தால், எங்களுக்குக் கிடைத்தது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரத்துக் கதை, தமிழர்களுக்கோ மூன்று நகரக் கதை கிடைத்தது என்று பாராட்டிச் சேரன் தம்பியின் இலக்கியப் புலமைக்குத் தலை வணங்குவார்கள். சிலப்பதிகாரக் களஞ்சியத்தில் தகவல்கள் நூற்றுக் கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

அருகன் பெயர்களை அடுக்கி உரைப்பதும், பிறவா யாக்கை பெரியோன் கோவில் என்று சிவன் கோவிலையும், திருப்பதியில் திருவேங்கடவனின் நின்ற கோலத்தையும், திருவரங்கத்தில் கிடந்த வடிவத்தையும் காட்டுவது போலவே ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப் பற்றியும், குன்றக் குரவையில் முருகனைப் பற்றியும், வேட்டுவ வரியில் கொற்றவையையும் குறிப்பிட்டுள்ளார். சமய நல்லிணக்கமும், சமரசப் பொதுமையும் சேரர் குலத்தோன்றலிடம் தழைத்தோங்குகின்றன.

தமிழகப் படை வீரர்கள் மலை முதுகு நெளிய நடந்தனராம். தமிழ் என்றால் மொழி மட்டுமன்று. காதல், இனிமை, இலக்கியம் என்று பல பொருள் படுவதுபோலப் படைவீரர்களின் ஆற்றலைக் கூடத் தமிழ் என்றே பாடிய தமிழ் மறவர் இளங்கோவடிகள். “காவா நாவில் கனக விசயனும் அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்” என்று கூறியதாக அமைத்துள்ளார். தென்தமிழ் ஆற்றல் என்றே மேலும் சில இடங்களில் காணலாம்.

“அரசியலில் தவறு செய்தவருக்கு அறமே கூற்றாவதும்”, “பத்தினி மகளிரை உயர்ந்தோர் பாராட்டிப் போற்றுவதும்”, “ஊழ்வினை விடாது வந்து ஊட்டும்” என்ற மூன்று உண்மைகளை நூலிழை போலக் கோர்த்துச் சிலப்பதிகார காப்பியத்தின் செம்பொருளை இளங்கோவடிகள் வலியுறுத்தினார். பாண்டிய நாட்டில் அரசியலில் தவறு நடப்பதும், சேர நாட்டில் பத்தினிக் கடவுளைச் சிறப்பித்துப் போற்றுதலும், சோழ நாட்டில் யாழிசை மேல் ஊழ்வினை ஆட்சி செய்தலையும் காணலாம்.

செழிப்பான மாபெரும் செல்வக் குடும்பத்தின் மங்கலத் திருமணம் என்ற வகையில் யானை மீது மகளிர் அமர்ந்தபடி ஊர்வலம் வந்து கண்ணகி-கோவலன் திருமணச் செய்தியை மாநகர மக்களுக்கு அறிவித்தார்களாம்.

தமிழ்நாட்டு மக்களுக்குக் காவிரியாறு அன்னை போல் இருந்து அமுதூட்டினாலும், சோழ நாட்டுக்குக் காவிரிநாடு என்றே பெயர். உழவர்களைக் காவிரி தன் புதல்வர் என்று புகழ்கிறார்.

சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று நாடெங்கும் பரப்பிய நம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., சென்னையில் 24-4-1956 அன்று செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாக சென்னை மாவட்ட தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத் தொடங்கி வைக்கச் செய்தார்.

இந்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 நாள் நிகழ்ந்த இந்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும் சித்திரைத் திங்களின் சித்திரை முழுநிலவை அடிப்படையாகக் கொண்டு இந்திர விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 24-ம் நாளில் சென்னையில் உள்ள இளங்கோவடிகள் சிலைக்கு இந்த ஆண்டு முதல் மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிலப்பதிகாரத்தை நினைக்கும் போது ஒரு வகையில் மனம் கலங்குகிறது. சேர நாடு நம்மோடு சேராத நாடாயிற்று. பூம்புகார் கடலில் மூழ்கியது. மதுரையின் ஒரு பகுதி கனலில் கரிந்தது. வஞ்சி மாநகரம் எங்கே என்று தேட முடியாதபடி மணலில் புதைந்தது. காற்சிலம்பு அணிவதை மகளிர் எப்போதோ மறந்துவிட்டனர். இந்திர விழா ஊர் மக்களால் இப்போது கொண்டாடப்படுவது இல்லை. யாழ் இப்போது இல்லை.

கோவலன் கொல்லப்படுகிறான், பாண்டியன் அரசுக்கட்டிலில் விழுந்து இறக்கிறான். கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறக்கிறாள். அடைக்கலம் தந்த இடைக்குல மாதுரி தீப்பாய்கிறாள். கவுந்தியடிகள் உண்ணாநோன்பிருந்து உயிர் விடுகிறார். கோவலன் தாயும், கண்ணகி தாயும் உயிர் துறக்கின்றனர், பூம்புகாரின் பொற்கொடி மாதவி புத்த மதத் துறவியாகிறாள். கோவலன், கண்ணகி தந்தையர் துறவறம் கொள்கின்றனர். இவ்வாறு அவலக்கடலில் அடுக்கிய இடுக்கண்களால் துன்பியல் நாடகத் தொடர்ச்சி நிறைவடைகிறது.

சிலப்பதிகாரம் ஓர் அரிய பெரிய ஆவணம். நீங்காத நினைவுச் சின்னம். பண்பாட்டின் பெட்டகம். பழங்கலைகளின் புதையல்.

- அவ்வை அருள், இயக்குனர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை

Next Story