படித்து முடித்தவுடன் வேலை வேண்டுமா?


படித்து முடித்தவுடன் வேலை வேண்டுமா?
x
தினத்தந்தி 24 April 2018 9:31 AM GMT (Updated: 24 April 2018 9:31 AM GMT)

படித்ததும் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இந்த மாதத்துடன் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேட தயாராகும் இளைஞர்களுக்கு இந்தக் கனவு அதிகமாகவே இருக்கும்.

 உடனே வேலை கிடைப்பது ஒன்றும் சிரமமான காரியமில்லை. சரியாக திட்டமிட்டுப் படித்திருந்தால் நீங்கள், கேம்பஸ் தேர்விலேயே கூட வேலையை உறுதி செய்திருக்கலாம். இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. வேலை கிடைப்பதற்கு எளிமையான வழிகள் சில உண்டு. அவற்றை நீங்கள் சரியாகச் செய்யுங்கள் இல்லாவிட்டால் மறுசீரமைத்துக் கொள்ளுங்கள். வேலை உங்கள் கைமேலே....

சரியாக திட்டமிட்டால்தான் விரும்பிய துறைக்கு வேலைக்குச் செல்ல முடியும். இல்லாவிட்டால் கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டு, வாழ்வை கழிக்க வேண்டியிருக்கும். எனவே முதலில் திட்டமிடுவது அவசியம். அடுத்ததாக விரும்பிய வேலையைப் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வது ரொம்ப முக்கியம்.

வேலை தேடும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்து படித்த துறையில் வேலை தேட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லாவிட்டாலும், மற்ற வேலைக்குச் செல்லும் முடிவுக்கு உடனே வந்துவிடக்கூடாது. உங்கள் துறைக்கான வாய்ப்பு எப்போது வரும், அதற்கான கால அவகாசம் எவ்வளவு, அந்தப் பணியைப் பெற்றுவிட இருக்கும் காலத்தை எப்படி திட்டமிட்டு செலவிட வேண்டும் என்பதிலேயே உங்கள் கவனம் இருக்க வேண்டும். அதுவரை வருமானம் வேண்டுமே? என்று எதிர்காலத்திற்கு உதவாத தற்காலிக வேலைகளுக்குச் செல்வதை தவிர்த்துவிடுங்கள். பொருந்தாத வேலையில் பணி அனுபவம் பெறுவது, வேலை கிடைப்பதை சிரமமாக்கிவிடும். பின்னர் அதுவே தற்காலிக பணியில் ஒட்டிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே சாதாரண முடிவும் உங்கள் வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க பொறுமையுடன் காத்திருப்பது அவசியமாகும்.

தவறாமல் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை எதிர்நோக்கியிருங்கள். அதற்காக பத்திரிகைகளை, வேலைவாய்ப்பு பருவ இதழ்களை தவறாமல் வாங்கிப் படியுங்கள். குறிப்பாக வேலைவாய்ப்புக்கென்று தனியே ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகள், அரசு அறிவிப்பு விளம்பரங்களை தவறவிடாமல் படியுங்கள்.

வேலைவாய்ப்புகளை தொகுத்து தருவதற்கென்றே பல இணையதளங்கள் உள்ளன. இணைய வேலைவாய்ப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன. சமூவ வலைத்தளங்களும் வேலைவாய்ப்புக்கான பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. இலவசமாக பதிவு செய்யும் வாய்ப்புகளையும் பல தளங்கள் வழங்குகின்றன. எனவே இவற்றில் நம்பிக்கையான வேலைவாய்ப்பு இணையங்களில் உங்கள் சுயவிவரங்களை பதிவு செய்துவிட்டு காத்திருப்பது எப்போது வேண்டுமானாலும் வேலையைப் பெற்றுத் தரும்.

கன்சல்டன்சி எனப்படும் வேலைவாய்ப்புக்கு உதவும் ஆலோசனை மையங்களின் மூலமும் வேலை பெற முயற்சிக்கலாம். இவர்களின் வழியே வேலை பெறும்போது முன்கூட்டியே பணம் கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் அணுகும் கன்சல்டன்சி நம்பிக்கையானதா, அதன் மீது மோசடிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று இணையதளத்தில் ஒருமுறை அலசிப் பார்த்துவிடுங்கள்.

வேலை தேடும் விஷயத்தில் நண்பர்கள் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள். உங்களுக்கு முன்பு இதே படிப்பை படித்த மூத்த மாணவர்கள், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைகள், உதவிகளை நாடுங்கள். அவர்களிடம் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து வைக்கலாம்.

சொந்த ஊரில் வேலையை விரும்பும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் அது அனைவருக்கும் அமைவது இல்லை. கிராமப்புறங்களில் சின்னஞ்சிறு வேலைகளைத் தவிர, பலவிதமான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். எனவே யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற மனப்பான்மையுடன், வேலைவாய்ப்பு கிடைக்கும் நகரங்களுக்குச் செல்ல தயங்க வேண்டாம்.

வேலைதேடும் காலத்தில் விரக்தி அடைய வேண்டாம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சம்பந்தமான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். கணினி பயிற்சிக்கு செல்லலாம். உங்கள் துறையைச் சேர்த்த முன்னோடிகள், மூத்தவர்களுக்கு உதவியாக இருந்து பயிற்சி பெறலாம்.

ஒவ்வொரு பணிக்கு அழைப்பு வரும்போதும் அதற்கேற்ப ரெஸ்யூமை மாற்றி அமைக்கலாம். எப்போதும் ஒரே மாதிரியான சுயவிவரப் பட்டியல் வழங்குவதை தவிருங்கள். முக்கியத்துவம் நிறைந்த விவரங்களை முதலில் குறிப்பிடுங்கள். மற்றவர்களைப் பார்த்து காப்பியடித்து ரெஸியூம் தயாரிக்காமல், உங்கள் சொந்த முயற்சியில், சொந்த வார்த்தைகளில் ரெஸ்யூம் தயாரித்து வைத்திருங்கள்.

பெற்றோர் மற்றும் வழிகாட்டியின் உதவியின்படி செயல்படுங்கள்.

Next Story