மகளை கற்பழித்த பெயிண்டருக்கு சாகும்வரை சிறை தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மகளை கற்பழித்த பெயிண்டருக்கு சாகும்வரை சிறை தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகளை கற்பழித்த பெயிண்டருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். சம்பவத்தன்று மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றார்.

வீட்டில் 8-ம் வகுப்பு படித்து வந்த பெயிண்டரின் 16 வயது மகள் மட்டும் தனியாக தூங்கி கொண்டிருந்தார். குடிபோதையில் வீட்டிற்கு வந்த பெயிண்டர், தனது மகள் என்றும் பாராமல், தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த சிறுமி சத்தம் போட்டார்.

உடனே அவரது வாயை துணியால் பொத்தி, கைகளை கயிறால் கட்டிய பெயிண்டர், கொலை செய்து விடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக மகளை கற்பழித்தார். நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். சிறிது மனநலம் குன்றிய அந்த சிறுமி, தந்தையின் மிரட்டலுக்கு பயந்து நடந்த விவரத்தை யாரிடமும் சொல்லவில்லை.

இதேபோல் பலமுறை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக்கொண்டு அந்த சிறுமியின் வாயை பொத்தி பெயிண்டர் கற்பழித்துள்ளார். தான் கர்ப்பம் ஆன விஷயம் கூட தெரியாத அந்த சிறுமி தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி திடீரென சிறுமிக்கு வயிற்று வலி அதிகமானது. சிறிது நேரத்தில் வீட்டில் வைத்தே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், குழந்தையையும், சிறுமியையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதற்கு யார் காரணம்? என சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, தந்தை தான் பலமுறை தன்னை மிரட்டி கற்பழித்ததாக அந்த சிறுமி கூறினார்.

இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில், மகளை கற்பழித்த பெயிண்டருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அந்த பெயிண்டர், எந்தவித அரசு சலுகையும் பெற அருகதை அற்றவர். அவர் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும். இயற்கையாக மரணம் அடைந்த பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தையை வெளிநாட்டை சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story