பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் பட்டதாரி வாலிபர் கைது


பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 April 2018 4:30 AM IST (Updated: 25 April 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் வங்கி பெண் ஊழியர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கரூர்,

திருப்பூர் மாவட்டம் வளையங்காடு பகுதி சித்தன் நகரை சேர்ந்த ரவியின் மகள் ரூபா(வயது 24). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார்.

கரூர் காந்திபுரம் நடுத்தெருவில் பெண் ஆடிட்டர் ஒருவரது வீட்டின் மாடியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். ரூபா தங்கியிருந்த வீட்டின் தரைத்தளத்தில் பெண் ஆடிட்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. முதல் தளத்தில் வீட்டின் உரிமையாளரும், ஆடிட்டரின் கணவரான மாதவன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதற்கு மேல் இருந்த தளத்தில் ரூபா வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அறையில் இருந்து வெளிப்பகுதி வளாகத்தில் ரூபா பிணமாக கிடந்தார். கொடூரமாக கொலை செய்யப்பட்ட அவரது உடலை கரூர் டவுன் போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடக்க காலத்தில் சிலரை பிடித்து விசாரித்தனர். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

கொலையாளி குறித்த தடயம் எதுவும் சிக்காததால் அப்போது வழக்கிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவர் தங்கியிருந்த வீட்டில் ஆடிட்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல் இருந்ததால் குற்றவாளியை அடையாளம் காணமுடியவில்லை. காலப்போக்கில் பல்வேறு சூழ்நிலை காரணமாக இந்த வழக்கு அப்படியே கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் வங்கி பெண் அதிகாரி ரூபா கொலை வழக்கில் கொலையாளியை கைது செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் ரூபா கொலை வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர். வீட்டிற்குள் நுழைந்து ரூபாவை கொலை செய்த நபர் அவருக்கு நன்கு தெரிந்த நபராக இருக்க வேண்டும் எனவும், வீட்டை பற்றி தெரிந்த நபராகவும் இருக்கலாம் எனவும் கருதி விசாரணை தொடங்கினர்.

இதில் பெண் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்த வெங்கமேடு மணியக்கார தெருவை சேர்ந்த மாரியப்பன்(25) ரூபாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து ரூபா பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர். கைதான மாரியப்பன் போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலம் வருமாறு:-

நான் (மாரியப்பன்) ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தேன். அப்போது எங்களது உரிமையாளர் வீட்டின் மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு ரூபா குடிவந்தார். அவரது அழகில் நான் மயங்கினேன். அவரை அடைய வேண்டும் என எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதனால் சம்பவத்தன்று நான் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியில் சென்றேன். பின்னர் வந்து ரூபாவின் அறைக்கு இரவில் சென்றேன்.

அப்போது சுடிதாரில் இருந்த ரூபாவை பிடித்து எனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். அவர் மறுத்து சத்தம் எழுப்ப முயன்றார். அவரது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் வைத்து மிரட்டினேன். அவர் தட்டிவிட்டு வெளியே ஓட முயன்றார். மேலும் வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிடுவதாக கூறினார். அப்போது அவர் கால் இடறி வளாகப்பகுதியில் கீழே விழுந்தார். அவரது வயிற்றின் மேல் அமர்ந்துகொண்டு மீண்டும் மிரட்டினேன். அப்போதும் அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் அவரது கழுத்து மற்றும் உடலில் பலமாக குத்தி கொலை செய்தேன்.

ரூபா பயன்படுத்திய செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றேன். சிம்கார்டை உடைத்து நொறுக்கினேன். கத்தியை பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் வீசி வீட்டு வீட்டிற்கு சென்றேன். எந்தவித பதற்றமும் இல்லாமல் மறுநாள் வந்தேன். ரூபாவின் செல்போனில் பேட்டரியை கழற்றிவிட்டு எனது வீட்டின் ஒரு அறையில் மேல் பகுதியில் மறைத்து வைத்தேன். இந்த நிலையில் போலீசார் என் மீது சந்தேகப்பட்டு விசாரணைக்கு வந்த போது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் ரூபாவின் செல்போன் சிக்கியதால் போலீசார் என்னிடம் துருவி, துருவி விசாரித்தனர். இதில் நான் ரூபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான மாரியப்பனை கரூர் கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். 

Next Story