ஜன்னலை உடைத்து அங்கன்வாடி மையத்தில் கொள்ளை முயற்சி


ஜன்னலை உடைத்து அங்கன்வாடி மையத்தில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 25 April 2018 4:45 AM IST (Updated: 25 April 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஜன்னலை உடைத்து அங்கிருந்த பொருட்களை மர்மநபர்கள் திருட முயற்சித்து உள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி ஜமாலியா நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் இயங்கிவருகிறது. இந்த மையம் மூலம் 40 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு உணவுகளை தயார் செய்து கொடுக்கும் வகையில் இங்கு சமையல் பாத்திரங்கள், காய்கறி, கியாஸ் சிலிண்டர், ஸ்டவ் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களும் உள்ளன. நேற்று முன்தினம் வேலைநேரம் முடிந்தபின்னர் இந்த மையத்தை பூட்டிவிட்டு பணியாளர் சென்று விட்டார்.

ஜன்னல் உடைப்பு

நேற்று காலை வழக்கம்போல அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு பணியாளர் வந்தார். அப்போது சமையல் கூடத்தின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து பார்த்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தில் இருந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. எனவே அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குற்றம் அதிகரிக்கும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘அங்கன்வாடி மையம் அமைந்துள்ள இடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறது. அவர்கள் மது அருந்த இந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள பொருட்களை திருடும் நோக்கில் சமையல் கூட ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் பொருட்களை திருடவில்லை. இந்த கொள்ளை முயற்சி குறித்து புகார் தராமல் அதிகாரிகள் மறைப்பதால் குற்றம் அதிகரிக்குமே தவிர குறையாது’ என்று தெரிவித்தனர். 

Next Story