ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலையில் 165 தொழிலாளர்கள் வெளியேற நோட்டீசு ஒட்டப்பட்டதால் பரபரப்பு


ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலையில் 165 தொழிலாளர்கள் வெளியேற நோட்டீசு ஒட்டப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலையில் 165 தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று நோட்டீசு ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 1967-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் (எச்.பி.எப்.) தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார். அப்போது, எச்.பி.எப் தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்த தொழிற்சாலை 320 ஏக்கர் பரப்பளவை கொண்டது.

அப்பகுதியில் பாலிஸ்ரே எக்ஸ்ரே பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவ மனைகள் மற்றும் பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு எக்ஸ்ரே பிலிம் உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 1991-ம் ஆண்டு மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையால், வெளிநாடுகளில் இருந்து கலர் பிலிம் மற்றும் எக்ஸ்ரே பிலிம் தனியார் நிறுவனங்களுக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப் பட்டது. இதனால் வெளிச்சந்தையில் ஏற்பட்ட விற்பனை போட்டியால் ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலை நலிவடைந்தது. பின்னர் எக்ஸ்ரே பிலிம் உற்பத்தி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது.

அதன் காரணமாக தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்கள் ஓய்வு பெற்றும், சிலர் விருப்ப ஓய்விலும் சென்று விட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக 167 தொழிலாளர்கள் மட்டும் பணிபுரிந்து வந்தனர். இதில் 2 தொழிலாளர்கள் இறந்து விட்டனர். மீதம் உள்ள 165 தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப் பட வில்லை. இதனால் அவர்கள் நிலுவையில் உள்ள தங்களது சம்பளம் மற்றும் பண பலன்களை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 165 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள தொகை மற்றும் பண பலன்களை வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும், எச்.பி.எப். நிர்வாகம் பண பலன்களை வழங்க வில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று எச்.பி.எப். தொழிற்சாலை துணை பொது மேலாளர் வினயன் 165 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் பணிபுரிவதை விட்டு, விட்டு வெளியேற வேண்டும் என்று நுழைவுவாயில் பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீசு ஒன்றை ஒட்டினார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி எச்.பி.எப். தொழிற்சாலையை விட்டு அனைத்து தொழிலாளர்களும் வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 165 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் வெளியேற வேண்டும். அந்த தொழிலாளர்களின் பண பலன்கள் அவர்களது வங்கி கணக்கில் செலுத் தப்படும். வருகிற 30 நாட்களுக்குள் எச்.பி.எப். குடியிருப்பை காலி செய்ய வேண்டும். வருமான வரி பிடித்தமும் செய்யப்படும். பண பலன்கள் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டில் இருப்பதால், தீர்ப்புக்கு பின்னரே பண பலன்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை படித்து பார்த்த தொழிலாளர்கள் கவலை அடைந்தனர்.

இது குறித்து எச்.பி.எப். தொழிற்சாலை ஐ.என்.டி.யு.சி. பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

30.6.2016 அன்று தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எச்.பி.எப். நிர்வாகம் எங்களுக்கு துரோகம் செய்து உள்ளது. கடந்த 16 மாதங்களாக 165 தொழிலாளர்களுக்கு சம்பள தொகை வழங்கப்பட வில்லை. அவர்கள் நேற்று வரை பணிபுரிந்து வந்தனர். இதனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். எங்களது கோரிக்கையை நிர்வாகம் கண்டுகொள்வது இல்லை. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை நம்பி உள்ளோம். எங்களுக்கு சாதகமான உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எச்.பி.எப். தொழிற்சாலையை நம்பி ஒரு காலத்தில் சினிமா தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர். அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்றாலே மதிப்பும், மரியாதையும் இருந்தது. தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு வந்த பஸ்கள் தற்போது வளாகத்தில் துருப்பிடித்தும், புதர்க ள் சூழ்ந்தும் காணப்படுகிறது. உள்பகுதியில் எக்ஸ்ரே பிலிம்கள், அலுவலக பயன்பாட்டு பொருட்கள், பல்வேறு அறைகள் பயன்பாடு இன்றி அப்படியே கிடக்கிறது. எச்.பி.எப். தொழிற்சாலை வளாகம் மற்றும் உள்பகுதி வெறிச்சோடி உள்ளது.

அங்கு மருத்துவமனைகள், அரங்குகள், பள்ளிக்கூடம், குடியிருப்புகள் உள்ளன. எச்.பி.எப். நிர்வாகம் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று நோட்டீசை ஒட்டி உள்ளதால் தொழிற்சாலை மூடப்பட உள்ளதாக தெரிகிறது. சுமார் 50 ஆண்டு காலமாக புகழ் பெற்று திகழ்ந்த ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலையின் நிலை பொதுமக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தொழிற்சாலை நுழைவுவாயிலில் நோட்டீசு ஒட்டப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையை பாதுகாக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை பல்கலைக்கழகம் அல்லது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரி பயிலும் இடமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நீலகிரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

Next Story