ஆறுமுகநேரியில் கொத்தனார் கொலை: அண்ணன்-தம்பி உள்பட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு பரபரப்பு தகவல்கள்
ஆறுமுகநேரியில் கொத்தனார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரியில் கொத்தனார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாலிபர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 28). கொத்தனாரான இவர், ஆறுமுகநேரி பேயன்விளை ரோட்டில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 5 பேர் கும்பல் அவரை தீர்த்துக்கட்டியது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
மணிகண்டன் தனது பெற்றோருடன் சென்னை மாதவரம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பிலோமி நகரைச் சேர்ந்த பேச்சியம்மாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். பேச்சியம்மாள் பிரசவத்திற்காக அடைக்கலாபுரம் வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மணிகண்டன் 3 மாதங்களுக்கு முன்பு மனைவியின் வீட்டில் வந்து தங்கினார்.
முன்விரோதம்
இந்த நிலையில் மணிகண்டனின் நண்பர் பேயன்விளையைச் சேர்ந்த ஜெயசங்கருக்கும், அவருடைய அண்ணன் விஜயனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இதில் ஜெயசங்கருக்கு ஆதரவாக மணிகண்டன் செயல்பட்டார். இதனால் விஜயனின் மைத்துனர்களாக பேயன்விளை புதூரை சேர்ந்த சிவக்குமார், விக்னேசுவரன் ஆகியோர் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மணிகண்டனுக்கும், விஜயன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மணிகண்டன் தனது மனைவி, குழந்தையை காயல்பட்டினம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பேயன்விளை ரோட்டில் மனைவியுடன் நடந்து வந்தார். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து இறங்கிய கும்பலை கண்டதும், மணிகண்டனின் மனைவி அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அந்த கும்பல் மணிகண்டனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. அதன்பிறகு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது.
5 பேருக்கு வலைவீச்சு
இந்த கொலை தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மணிகண்டன் கொலை தொடர்பாக சிவக்குமார், அவருடைய தம்பி விக்னேசுவரன், கார் டிரைவர் சேகர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story