ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற கலெக்டர்


ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற கலெக்டர்
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கரூர் கலெக்டர் அன்பழகன் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்றார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஒரு மோட்டார் சைக் கிளை ஓட்டிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளவும், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 23-ந் தேதி தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. ஹெல்மெட் அணிவது விபத்தின்போது உயிர் காத்திட உதவும். இதை எப்போதும் பயணத்தின் போது அணிவது பாதுகாப்பான ஒன்றாகும். அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து விபத்தில்லா பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவல் துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள், ஊர்க்காவல் படை, ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 400-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


Next Story