கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து திருப்பூர் பனியன் நிறுவன அதிபர் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை


கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து திருப்பூர் பனியன் நிறுவன அதிபர் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 25 April 2018 4:45 AM IST (Updated: 25 April 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து திருப்பூரில் பனியன் நிறுவன அதிபர் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை, ஒரு கும்பல் அள்ளிச்சென்றது. காரில் தப்பிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45), பனியன் நிறுவன அதிபர். இவருடைய மனைவி சாந்தாமணி(41). இவர்களுக்கு ஸ்ரீராம் (14) என்ற மகனும், பவதாரணி (10) என்ற மகளும் உள்ளனர். நேற்று காலை சிவக்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். தனது குழந்தைகளுடன் சாந்தாமணி வீட்டில் இருந்துள்ளார்.

காலை 11.30 மணி அளவில் சொகுசு காரில் டிப்-டாப் உடை அணிந்து 6 பேர் சாந்தாமணி வீட்டுக்கு வந்துள்ளனர். கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளதாகவும், வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பின்னர் சாந்தாமணியை வீட்டுக்குள் அழைத்து சென்ற அந்த கும்பல், கதவை உள்புறமாக பூட்டியது.

பின்னர் சாந்தாமணியிடம் பீரோ சாவியை பெற்ற அந்த கும்பல், பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை அள்ளியது. மேலும் அவர்கள், சாந்தாமணி மற்றும் குழந்தைகளை வீட்டில் ஓரிடத்தில் அமர வைத்து விட்டனர். வீடு முழுவதும் சோதனை நடத்துவது போல் அந்த கும்பல் ஒவ்வொரு அறையாக தேடினார்கள். பின்னர் கையில் கிடைத்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டனர்.

சுமார் ½ மணி நேரம் வீட்டுக்குள் இருந்த அந்த கும்பல் பின்னர் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு, கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வருமாறு கூறி விட்டு காரில் ஏறி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சாந்தாமணி தனது கணவரிடம் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சிவக்குமார் வீட்டுக்கு வந்து விசாரித்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினால் துறை ரீதியாக நோட்டீசு வழங்கி அதில் கையெழுத்து பெறுவது வழக்கம். ஆனால் இந்த கும்பல் ஒரு தாளில் மட்டும் சாந்தாமணியிடம் கையெழுத்து பெற்று அதையும் அவர்களே எடுத்து சென்று விட்டனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக சிவக்குமார் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் சென்று சிவக்குமார், சாந்தாமணியிடம் விசாரணை நடத்தினார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சிவக்குமார் வீட்டில் இருந்து 18 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை மர்ம கும்பல் அள்ளிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம கும்பல் வந்த சொகுசு கார் சொகுசு அடையாளம் தெரிந்தது.

அந்த அடையாளங்களை கூறி திருப்பூர் மாநகரம் முழுவதும் உள்ள போலீஸ் சோதனை சாவடிகள் உஷார் படுத்தப்பட்டது. இருப்பினும் மர்ம ஆசாமிகள் வந்த காரை கண்டறியமுடியவில்லை. சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

சிவக்குமார் வீட்டில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்த அந்த கும்பல் கணினியில் பொருத்தியிருந்த ‘ஹார்ட் டிஸ்க்’ எடுத்துச் சென்றனர். அதேபோல் அந்த கும்பல் வந்த கார் ‘நம்பர் பிளேட்டில்’ பதிவு எண் 5676 என்று மட்டும் தெளிவாக இருக்கிறது. மற்ற எழுத்துகள் சரிவர இல்லை. போலியான ‘நம்பர் பிளேட்டை’ அந்த கும்பல் பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story