கூட்டுறவு தேர்தல் வேட்புமனு தள்ளுபடி: தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வினர் சாலைமறியல்


கூட்டுறவு தேர்தல் வேட்புமனு தள்ளுபடி: தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 25 April 2018 4:30 AM IST (Updated: 25 April 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பென்னாகரத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டியில் மஞ்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்க தேர்தலில் போட்டியிட 110 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 16 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கட்சியினர் நேற்று காலை, வேட்புமனுக்களை முறையாக பரிசீலனை செய்யவில்லை என கூறி ஒன்று திரண்டு கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனர். பின்னர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து முருகேசன் மற்றும் அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றனர். அப்போது சங்க அலுவலகத்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூட்டி அதன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் சங்க அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தள்ளுபடி செய்த அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தாசில்தார் சேதுலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சாக்கப்பன், ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் முடிந்தபின்னர் போக்குவரத்து சீரானது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்க தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 60 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டு இறுதி பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிடப்படாமல் சென்று விட்டார். இதனால் இன்ப சேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் மாதன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று இரவும் இந்த போராட்டம் தொடர்ந்தது. எம்.எல்.ஏ. அந்த அலுவலகத்திலேயே இரவில் படுத்து இருந்தார்.

நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உள்ளது. இந்த சங்க தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடாததால் சங்கம் முன்பு தி.மு.க, பா.ம.க. மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர். அப்போது அதிகாரி ஒருவர் இறுதி வேட்பாளர் பட்டியலை ஒட்டுவதற்காக வெளியே வந்தார். திடீரென அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் அங்கு வந்து அந்த பட்டியலை பிடுங்கி கொண்டு ஓடினார். போலீசார் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறியும், இதை கண்டித்தும் மற்ற கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story