மானாமதுரையில் கண்மாயை சேதப்படுத்தி மணல் திருட்டு: போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக புகார்


மானாமதுரையில் கண்மாயை சேதப்படுத்தி மணல் திருட்டு: போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக புகார்
x
தினத்தந்தி 25 April 2018 3:45 AM IST (Updated: 25 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை, கீழமேல்குடியில் கண்மாயை சேதப்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக மணல் திருட்டு என்பது அதிக அளவில் நடந்து வருகிறது. பல இடங்களில் சட்டவிரோதமாக அதிகாரிகள் உடந்தையுடன் வைகை ஆறு, கண்மாய், ஊருணி உள்ளிட்டவற்றில் இரவு முழுவதும் மணல் திருட்டு நடைபெறுகிறது. மணல் திருட்டு குறித்து தகவல் கொடுப்பவர்கள் மீது மணல் திருட்டு கும்பல்கள் தாக்குதல் நடத்துவதால் பலரும் புகார் கொடுக்க தயங்குகின்றனர். மானாமதுரை கண்மாய் ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கீழமேல்குடி, கால்பிரவு உள்ளிட்ட கிராமங்கள் வரை மானாமதுரை கண்மாய் உள்ளது. தற்போது மானாமதுரை நகரம் விரிவாக்கம் அடைந்து வருகிறது. புதிய பஸ் நிலையத்தை ஒட்டி கீழமேல்குடி கிராமம் அமைந்துள்ளதால், பலரும் விவசாய நிலங்களை முறைகேடாக வாங்கி அதில் கட்டிடங்களை கட்டி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்தநிலையில் தற்போது அப்பகுதியில் நிலத்தை கெட்டிப்படுத்த சட்டவிரோதமாக மானாமதுரை கண்மாயில் மணலை திருட்டுத்தனமாக அள்ளுகின்றனர். இரவு முழுவதும் மானாமதுரை கண்மாயில் மணல் அள்ளி கீழமேல்குடி வழியாக கொண்டு செல்கின்றனர். இதனால் மானாமதுரை கண்மாயில் பெரிய அளவில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. கடந்த ஒரு வாரமாக மணல் திருட்டு நடைபெறுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியதன் பயனாக கடந்த வாரம் மணல் திருட்டு குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் செய்தனர். ஆனால் புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகியும் இன்றுவரை அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

போலீசார் தரப்பில் கூறுகையில், மணல் திருட்டின் மதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் தகவல் கொடுக்கவில்லை. அதனால் வழக்கு பதிவு செய்யவில்லை என்றனர். வருவாய்த்துறையினர் கூறுகையில், மணல் திருட்டின் மதிப்பை கனிமவள துறையினர் தான் மதிப்பீடு செய்வார்கள். திருட்டிற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். ஆனால் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக கூறினர்.

எனவே கண்மாயை சேதப்படுத்தி மணல் திருடியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story