விருத்தாசலம் அருகே சினிமா பாணியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை


விருத்தாசலம் அருகே சினிமா பாணியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 24 April 2018 11:45 PM GMT (Updated: 24 April 2018 9:32 PM GMT)

விருத்தாசலம் அருகே பிரபல ரவுடியை காருடன் கடத்தி சென்று மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணக்கொல்லை கீழக்காலனி சுடுகாடு குட்டை அருகில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதன் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்த காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு உடைந்த நிலையில் இருந்தது. மேலும் அந்த காரில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் உறைந்து காணப்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி ஆலடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஆலடி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் அந்த காரின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அந்த காரின் பின் இருக்கையில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். அப்போது காருக்குள் பிணமாக கிடந்தவர் நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் நடுத்தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் அய்யப்பன் என்கிற தேவநாதன் (வயது 32) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி ரம்யா என்கிற மனைவியும், அனிருத்(2) என்கிற மகனும், அனிஷ்கா என்கிற 8 மாத பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.

பிரபல ரவுடியான அய்யப்பன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு ஜோதி என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கு, 2017-ம் ஆண்டு சிவசண்முகம் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கு மற்றும் அடிதடி வழக்கு என்று மொத்தம் 27 வழக்குகள் நெய்வேலி தெர்மல், வடலூர், டவுன்ஷிப் பகுதி போலீஸ் நிலையங்களில் உள்ளன. இதன்காரணமாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அய்யப்பன், தனக்கு நெய்வேலியை சேர்ந்த விக்கி என்பவர் பணம் தரவேண்டும் எனவே அங்கு சென்று வாங்கி வரலாம் என்று கூறி உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு தனது காரில் சென்றார். காரை அய்யப்பன் ஓட்டினார்.

டவுன்ஷிப் மெயின்பஜார் சென்று, விக்கியை அவர்கள் சந்தித்தனர். அப்போது விக்கி, தனக்கு பணம் தர வேண்டியவர் 21-வது வட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நிற்கிறார், எனவே அங்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து அய்யப்பன், விக்கியையும் காரில் அழைத்து கொண்டு புறப்பட்டார். ஆனால் அங்கு அவர் கூறியபடி யாரும் இல்லை.

தொடர்ந்து விக்கி, அய்யப்பனிடம் நீங்கள் 20-வது வட்டத்தில் ஊழித்தெருவில் உள்ள ஆலமரத்தடியில் காத்திருங்கள், நான் பணத்தை வாங்கி கொண்டு அங்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அய்யப்பன் சரி என்று கூறிவிட்டு, உறவினருடன் காரில் அங்கு சென்றார்.

அங்குள்ள ஆலமரத்தடியில் காரை நிறுத்திவிட்டு, அய்யப்பனும், அவருடைய உறவினரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 7 பேர் கொண்ட கும்பல் அந்த வழியாக அவர்களை கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த கும்பல் மீண்டும் அங்கு திரும்பி வந்து, அய்யப்பனை சுற்றி வளைத்தது. இதை பார்த்து பயந்து போன அவரது உறவினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து அந்த கும்பல் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அய்யப்பனின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. பின்னர், அய்யப்பனை காரில் அந்த கும்பல் வலுக்கட்டாயமாக ஏற்றியது. அந்த காரை ஒருவர் ஓட்டி செல்ல, அதை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிளில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் தான் விருத்தாசலம் அருகே மணக்கொல்லை கீழகாலனி சுடுகாட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அய்யப்பன் வெட்டுக்காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து மற்றும் உடல் பகுதியில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரை தாக்கி காருடன் கடத்தி சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத சுடுகாட்டு பகுதியில் வைத்து அவரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி காருக்குள் உடலை போட்டு சென்று இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அய்யப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த நெய்வேலி 20-வது வட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் இது பற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யப்பன் என்கிற தேவநாதனை கொலை செய்தது யார்? பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ரவிந்திரராஜ், சீனிவாசன் தலைமையிலும், டெல்டா பிரிவு போலீசார் என்று 4 தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம், நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story