காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும்
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும்.
பெங்களூரு,
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்றும் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நல்ல வாய்ப்பு உள்ளது
கர்நாடக மாநிலம் கலபுரகியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் மீண்டும் முதல்-மந்திரியாக சித்தராமையாவே பதவி ஏற்பார் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு வலுவான தலைவர். இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை தானாக முன்வந்து முதல்-மந்திரியாக தேர்வு செய்யாது.
எப்படியும் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறும். அப்போது காங்கிரஸ் மேலிடம் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கருத்துகளை பெற்று, ஒருமனதாக ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும். அவரே முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். அது சித்தராமையாவாகக் கூட இருக்கலாம். அப்படி நடந்தால் சித்தராமையா தொடர்ந்து 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தார் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார்.
விவாதிப்பது தேவையற்றது
இந்த தேர்தலை சித்தராமையா தலைமையில் தான் காங்கிரஸ் எதிர்கொள்கிறது. இருப்பினும் அவர் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அவர் ஒரு ‘கேப்டன்’ போல் இருந்து கட்சியை வழிநடத்திச் செல்வார் என்றே கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்-மந்திரி யார் என்று தெரியவரும். அதற்கு முன் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்று விவாதிப்பது தேவையற்றது.
முதல்-மந்திரியாக யாரை வேண்டுமானாலும் கட்சி மேலிடம் அறிவிக்கலாம். அவர் யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும். கட்சி மேலிடத்திற்கே முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு.
வெற்றிபெறுவது நிச்சயம்
முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பலரும் விமர்சித்து பேசுகிறார்கள்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வெற்றிபெறுவது நிச்சயம். அதுபோல் பாதாமி தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையாவிடம் பாதாமி தொகுதி மக்களும், வடகர்நாடக மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அவருக்கு அங்கு மக்கள் செல்வாக்கும் உண்டு. அதனால் தான் சித்தராமையா பாதாமி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்றுவிடுவோமோ? என்ற பயத்தில் அவர் பாதாமி தொகுதியில் போட்டியிடவில்லை.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
Related Tags :
Next Story