மாயமான வங்கி அதிகாரி பிணமாக மீட்பு கொலை செய்ததாக சக பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது


மாயமான வங்கி அதிகாரி பிணமாக மீட்பு கொலை செய்ததாக சக பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2018 3:15 AM IST (Updated: 25 April 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே மாயமான வங்கி அதிகாரி பிணமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்ததாக சக பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூரு அருகே மாயமான வங்கி அதிகாரி பிணமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்ததாக சக பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாயம்

பெங்களூரு சூர்யா நகர் அருகே வசித்து வந்தவர் முருகேஷ்(வயது 36). இவர், பொம்மனஹள்ளி அருகே காசனயாகனஹள்ளியில் உள்ள விவசாய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 13-ந் தேதி முருகேஷ், தனது வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த முருகேசின் மனைவி ராதா தனது கணவரை அக்கம்பக்கத்து வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால், கடந்த 14-ந் தேதி முருகேஷ் மாயமானதாக கூறி சூர்யா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும், கடந்த 13-ந் தேதி காலையில் தனது கணவரை தேடி 3 மர்மநபர்கள் வந்ததாகவும், அவர்கள் அவருடைய செல்போன் எண்ணை வாங்கி சென்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால், மாயமான முருகேஷ் பற்றியும், மர்மநபர்கள் 3 பேர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில், சாமண்டூர் கிராமத்தில் உள்ள தைலமரத்தோப்பில் கடந்த 15-ந் தேதி பிணமாக கிடந்த முருகேசை போலீசார் மீட்டனர். அப்போது, அவருடைய முகத்தில் காயங்கள் காணப்பட்டன. இதனால், மர்மநபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி, கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது முருகேசை கொலை செய்ததாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சக பெண் ஊழியர் உள்பட 4 பேர் கைது

விசாரணையில், அவர்கள் ஜிகனியை சேர்ந்த ரேகா(27), ரேகாவின் உறவினர் புட்டபசப்பா என்ற அப்பி(26), கார்வேபாவி பாளையாவை சேர்ந்த சக்திவேல்(27), பேகூரை சேர்ந்த மணிகண்டன்(29) ஆகியோர் என்பது தெரியவந்தது. கைதான ரேகா, காசனயாகனஹள்ளியில் உள்ள விவசாய கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. வங்கியில் ரேகா, சுமார் ரூ.1½ லட்சம் கையாடல் செய்துள்ளார். இதை முருகேஷ் கண்டுபிடித்து, ரேகாவை கண்டித்ததும் தெரியவந்தது. இதனால் அவர் மீது ரேகாவுக்கு வெறுப்பு வந்துள்ளது. மேலும், வங்கியில் செயலாளர் பதவியை பெறவும் ரேகா முயற்சித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் முருகேசை கொலை செய்ய ரேகா முடிவு செய்தார். அதன்படி, அவர் தனது உறவினரான புட்டபசப்பாவின் உதவி கேட்டுள்ளார். உதவி செய்ய அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கூலிப்படையை ஏவி கொலையை அரங்கேற்ற அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, சக்திவேல், மணிகண்டன் ஆகியோருக்கு ரூ.25 ஆயிரத்தை ரேகா கொடுக்க முடிவு செய்துள்ளார். முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை அவர் கொடுத்துள்ளார். மேலும், மீதமுள்ள பணத்துக்காக அவருடைய ஸ்கூட்டரையும் அவர்களிடம் கொடுத்து உள்ளார்.

கழுத்தை இறுக்கி கொலை

இதையடுத்து, கடந்த 13-ந் தேதி புட்டபசப்பா, சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் முருகேசை பார்க்க அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த அவருடைய மனைவி, முருகேஷ் வெளியே சென்றிருப்பதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, அவரிடம் முருகேசின் செல்போன் எண்ணை அவர்கள் வாங்கி உள்ளனர்.

பின்னர், முருகேசின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர்கள் 3 பேரும், வங்கியில் கடன் பெறுவது பற்றி பேச வேண்டி இருப்பதாக கூறி தைலமரத்தோப்புக்குள் அவரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவரை பெல்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மர்மநபர்கள், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கத்தியால் அவருடைய முகத்தை குத்தியதோடு, முகத்தில் கல்லைப்போட்டு நசுக்கி உள்ளனர். பின்னர், அவருடைய உடலை செடி, கொடிகளால் மூடிவைத்து விட்டு அவருடைய செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் வங்கி ஆவணங்கள் அடங்கிய பை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த கொலைக்கு ரேகா தான் திட்டம் வகுத்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story