மாவட்ட செய்திகள்

அரசு, தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படும் - கவர்னர் கிரண்பெடி உறுதி + "||" + Women's safety will also be improved

அரசு, தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படும் - கவர்னர் கிரண்பெடி உறுதி

அரசு, தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படும் - கவர்னர் கிரண்பெடி உறுதி
அரசு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் புதுச்சேரி சமூக நல வாரியத்தின் சார்பாக குடும்ப நல ஆலோசகர்கள், நிர்வாகிகள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கான நெறிப்படுத்தும் பயிற்சி முகாம் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையின் கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.


தொடக்க விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றுப் பேசினார்.

பயிற்சி முகாமினை கவர்னர் கிரண்பெடி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரியில் குடும்ப ஆலோசனை மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த மையத்தில் உள்ளவர்கள் திறமையானவர்கள், படித்தவர்கள். நம்மிடம் நல்ல கட்டமைப்பு உள்ளது. அதை வைத்து இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

மற்ற மாநிலங்களைவிட புதுவையில் பெண்களின் நிலை மேம்பாட்டுடன் உள்ளது. இதற்கு காரணம் குடும்ப நல ஆலோசகர்களாகிய நீங்களும், அங்கன்வாடி மையங் களில் பணிபுரியும் பெண்களும்தான்.

புதுவை மாநிலத்தில் காவல்துறையில் டி.ஜி.பி. முதல் கடைநிலை காவலர்கள் வரை வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ளனர். அதில் நானும் உள்ளேன். அவர்களது செயல்கள் அன்றாடம் இதில் பதிவிடப்படுகின்றன. சிறந்த செயல்பாடுகளுக்கு உடனடியாக பாராட்டும் கிடைக்கிறது.

அதேபோல் குடும்பநல ஆலோசகர்கள், பெண் போலீசார், தன்னார்வலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் இணைந்து செயல்பட்டால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படும். இதனால் ஒவ்வொரு பெண்ணிற்கும் 3 அடுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு அமைச்சர் கந்தசாமியின் பெயரில் ‘கே மாடல்’ என்று பெயரிடலாம். அமைச்சர் நினைத்தால் உடனே இந்த அமைப்பினை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கலாம்.

நீங்கள் அனைவரும் குடும்ப வன்முறை சட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். சொத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தை அணுகியும் தீர்வு காணலாம்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

ஒரு மனிதனுக்கு கடல் ஆழம் அளவுக்கு திறமை உள்ளது. ஆனால் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. காதல் கைகூடாவிட்டாலோ, தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அது ஒரு நொடியில் எடுக்கும் முடிவுதான்.

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு முடிவல்ல. எதிலும் போராடித்தான் வெற்றிபெற வேண்டும். நமது கவர்னர் கிரண்பெடி டெல்லி சிறையில் கவுன்சிலிங் நடத்தி கைதிகளை நல்வழிப்படுத்தினார். கவர்னருடன் சண்டை போடும் அமைச்சர் ஏன் இப்படி பாராட்டி பேசுகிறார்? என்று நீங்கள் நினைக்கலாம்.

தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. சில நேரங்களில் அரசு அதிகாரிகள் சொல்வதை கேட்டு அவர் செயல்படும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. ஏழைகளுக்கு மட்டும்தான் இலவசங்கள் வழங்கவேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடு தான்.

ஏழை மாணவர்களுக்கான முழு கல்விக்கட்டணத்தையும் அரசே தரவேண்டும் என்பதுதான் எனது எண்ணம். வசதி படைத்தவர்கள் தாங்களாகவே அதை விட்டுத்தர வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

புதுவையை பொறுத்தவரை சிலர் திட்டம்போட்டு தவறு செய்கிறார்கள். உழைக்காமல் சொகுசாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தரமான இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பேன் - கவர்னர் கிரண்பெடி உறுதி
மாதந்தோறும் தரமான இலவச அரிசி வழங்க, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன் என்று, கவர்னர் கிரண்பெடி கூறினார்.
2. கவர்னர் கிரண்பெடி நடவடிக்கையால் புதுப்பொலிவு பெறும் அரசு நடுநிலைப்பள்ளி
கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கையால் மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
3. முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் கிரண்பெடியை வரம்பு மீறி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது, சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி
முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் கிரண்பெடியை வரம்பு மீறி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை