எழுத்தால் உயர்ந்த இமயம்


எழுத்தால் உயர்ந்த இமயம்
x
தினத்தந்தி 25 April 2018 11:22 AM GMT (Updated: 25 April 2018 11:22 AM GMT)

இன்று (ஏப்ரல் 25-ந் தேதி) மு.வரதராசனார் பிறந்த தினம்.

‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற தாரக மந்திரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் டாக்டர் மு.வரதராசனார். எளிய வாழ்வும், கடின உழைப்பும், உயர்ந்த லட்சியங்களும் கொண்டிருந்த வரதராசனார் தமிழாசிரியராக இருந்து பல்கலைக்கழக துணை வேந்தராக உயர்ந்தவர்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வேலம் என்ற கிராமம் வரதராசனாரின் சொந்த ஊர். அங்கு அவர் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் முனுசாமி. தாயார் அம்மாக்கண்ணு அம்மாள்.

1928-ம் ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் சிறப்பாக தேறினார். கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் வேலையில் சேர்ந்தார். பின்னர் தமிழ்வித்துவான் முதல்நிலைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சில காலம் திருப்பத்தூரில் நகராண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தார்.

ஆங்கில நூல்களையும் அதிகம் கற்றார். சென்னை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஓ.எல். பரீட்சை எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக சேர்ந்தார். பின்னர், எம்.ஓ.எல். பட்டம் பெற்று கல்லூரி தமிழ்த்துறை தலைவராக உயர்ந்தார். ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்பது பற்றி ஆராய்ந்து ‘பி.எச்.டி.’ பட்டம் பெற்றார்.

இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று நூல்கள், கடித நூல்கள், சிறுகதை, நாவல்கள் என்று ஏராளமான நூல்களை எழுதினார். அவருடைய எழுத்துகளில் லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக மாணவர்கள் மனதை பறிகொடுத்தனர். இளைஞர்களிடையே மேன்மையான மாற்றத்தையும், அறநோக்கத்தையும் நெறி பிறழா உறுதியையும் மு.வ.வின் எழுத்துகள் உண்டாக்கின. தமது அனைத்து சிந்தனைகளையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே தமது நூல்களில் பதிவு செய்ய நினைத்தார்.

1947-ம் ஆண்டு தொடங்கி தாம் மறைகின்ற காலம் வரை ஏறத்தாழ இருபத்தேழு ஆண்டுகள் டாக்டர் மு.வ. ஒரு மணித்துளியைக்கூட விரயமாக்கவில்லை என்பதற்கு இவர் எழுதிய 85 நூல்களே சாட்சி.

மு.வரதராசனார் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை’ 1949-ம் ஆண்டு வெளியிடப் பட்டது. இந்த கையடக்க நூல் இதுவரை 150 பதிப்புகள் விற்பனையாகி வரலாறு படைத்துள்ளது. இவரது திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற நூல் வள்ளுவரை பாமரத்தமிழர்களின் குடில்களுக்கு அழைத்து வந்து பயன் தரவைத்தது.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் இவரால் எளிய விளக்கங்கள் பெற்றன. அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்ற தலைப்பில் கடித வடிவில் எழுதிய கட்டுரைகள் ஏராளம்.

அகல் விளக்கு, கள்ளோ காவியமோ?, செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர் விழி, பெற்ற மனம், அல்லி, கரித்துண்டு, கயமை, நெஞ்சில் ஒருமுள், வாடா மலர் உள்ளிட்ட 13 நாவல்களை எழுதியுள்ளார். குறட்டை ஒலி, பழியும் பாவமும் ஆகியவை இவருடைய சிறுகதை தொகுதிகள். டாக்டர் மு.வ.வின் பல நூல்கள் மத்திய, மாநில அரசின் பரிசைப் பெற்றன. இவர் எழுதிய ‘அகல் விளக்கு’ என்ற நூலுக்கு சாகித்திய அகாடமி விருது கிட்டியது.

1971-ம் ஆண்டு மதுரை பல்கலைக்கழக துணை வேந்தரானார். ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் எவரும் குறைசொல்லா வண்ணம் நிறைவாக செய்துகாட்டினார். எழுதுவதற்கு தமது ஓய்வு நேரத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். இவர் ஆயிரக்கணக்கான தமிழ் பேராசிரியர்களை உருவாக்கினார்.

“புலமையும் வறுமையும் சேர்ந்தே பிறந்தவை” என்ற வறட்டு வேதாந்தத்தின் இடுப்பொடித்துத் தமது வாழும் நாளிலேயே மிகப்பெரிய செல்வந்தராக நிமிர்ந்து நின்றார்.

இலக்கிய மரபு, இலக்கியத் திறன், இலக்கிய ஆராய்ச்சி போன்ற மு.வ.வின் திறனாய்வு நூல்கள் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு எளிதில் செரிமானமாகும் அறிவு உணவாகத் திகழ்ந்தன. இன்றும் திகழ்கின்றன. அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு தமிழுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தமக்கு வாய்த்த எழுத்தாற்றலைக் கொண்டு புதியதோர் உலகம் செய்யவே பாடுபட்டார். மு.வ.வின் எழுத்துகள் எண்ணற்ற இளைஞர்களை மாற்றி இருக்கின்றன. பொது மக்களின் ஒத்துழைப்பும், அரசின் துணையும் அமையப் பெற்றிருக்குமேயானால் பெருமளவு மாற்றத்தை இந்த மாமனிதர் உருவாக்கிக் காட்டியிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மக்களின் மனம் உயராமைக்குக் காரணம் நாம் பின்பற்றுகின்ற தற்போதைய மக்களாட்சி நடைமுறையே என்பது மு.வ. கருத்து. சட்டம், சமுதாயம், கடவுள் என்ற மூன்றிற்கும் அல்லது எந்த ஒன்றிற்காவது அஞ்சும் அச்சம் தேவையாக உள்ளது. சட்டம், சமுதாயம், கடவுள் ஆகியவற்றின் மேல் அச்சம் இருக்கும் வரை சமுதாயத்தின் அமைதி குலையாது என்று மு.வ. நம்பினார். பணத்தின் செல்வாக்கு எதற்குமே அஞ்சாத ஒரு துணிவைக் கொடுத்துப் பலரையும் கெடுத்து வருகின்றது என்றார்.

10-10-1974 அன்று டாக்டர் மு.வரதராசனார் சென்னையில் இருந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வரதராசனாரின் மனைவி பெயர் ராதா அம்மையார். இவர்களுக்கு மூன்று மகள்கள்.

தமது எழுத்தாற்றலால் வரலாற்று ஏடுகளில் இமயமாய் எழுந்து நிற்கும் டாக்டர் மு.வரதராசனாரின் புகழ் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

- முனைவர் வேலூர் ம.நாராயணன்

Next Story