நண்பனின் ஆன்மா தன்னை அழைப்பதாக கூறி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


நண்பனின் ஆன்மா தன்னை அழைப்பதாக கூறி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2018 11:45 PM GMT (Updated: 25 April 2018 8:17 PM GMT)

நண்பனின் ஆன்மா தன்னை அழைப்பதாக கூறிய, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிதம்பரம்,

சிதம்பரம் அம்மாபேட்டையில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரவின்(வயது 19). இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு பின்பக்கமாக சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.இந்த நிலையில் அவரது பெற்றோர், வீட்டுக்கு பின்னால் சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரவின் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார், விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரவினின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், பிரவினின் பள்ளி பருவ நண்பர் அண்ணாமலை நகர் மண்ரோட்டை சேர்ந்த அரவிந்த் ஆவார். பி.இ. படித்த இவர், கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கல்லறைக்கு பிரவின் சென்று பூ வைத்து விட்டு வந்தார். இதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அரவிந்தின் ஆன்மா என்னை அழைத்து கொண்டு இருக்கிறது, அவனுடன் விரைவில் சென்றுவிடுவேன் என்று கூறி வந்தார்.

இதனால் பிரவினை கோவில், மருத்துவமனை என்று பல இடங்களுக்கு அழைத்து கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதில் தனது நண்பன் மரத்தில் தூக்குப்போட்டது போன்றே, பிரவினும் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story