ஐ.பி.எல்.; குதூகலம்... குழப்பம்... சுவாரசியம்...!


ஐ.பி.எல்.; குதூகலம்... குழப்பம்... சுவாரசியம்...!
x
தினத்தந்தி 26 April 2018 10:11 AM GMT (Updated: 26 April 2018 10:11 AM GMT)

இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சலை பரப்பும் 11-வது ஐ.பி.எல். சீசன் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டு இருக்கிறது.

பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை; சுவாரசியங்களுக்கு சிறிதளவும் குறைவில்லை. தோன்றி மறையும் சிறுசிறு சலசலப்புகளும் காண கிடைக்கின்றன.

இதுவரை (நேற்று முன்தினம்) முடிந்துள்ள 23 லீக் ஆட்டங்களில் இருந்து ஒரு ‘ரவுண்ட்-அப்’ பார்ப்போமா?

பொதுவாக, ஐ.பி.எல். என்றாலே சிக்சர் மழை பொழிவதை தான் ரசிகர்கள் பெரிதும் விரும்புவார்கள். இந்த முறையும் மைதானத்தில் பஞ்சமின்றி சிக்சர்கள் பறக்கின்றன. இதுவரை 314 சிக்சர்கள் பறந்துள்ளன. சராசரியாக ஒரு ஆட்டத்திற்கு 14 சிக்சர்கள் நொறுக்கப்படுகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிறிஸ்கெயில் அதிகபட்சமாக 21 சிக்சர்களை விளாசி உள்ளார்.

கடந்த ஆண்டு ஐ.பி.எல்.லில் மொத்தம் 705 சிக்சர்கள் பதிவாகி இருந்தன. இந்த சீசனில் இதே வேகத்தில் பேட்டுகள் சுழன்றடித்தால், 60 ஆட்டங்களின் முடிவில் 800 சிக்சர்களை சுலபமாக தாண்டுவது உறுதி.

ஐ.பி.எல். சீசனில் வழக்கத்துக்கு மாறாக வீரர்களின் மனைவிமார்கள் ராஜ்யம் அதிகமாக இருக்கிறது. அதாவது, போட்டியை காண ரசிகர்கள் பட்டாளம் ஒரு பக்கம் படையெடுக்கிறது என்றால் வி.ஐ.பி. கேலரியை வீரர்களின் மனைவிகளும் அலங்கரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

டோனியின் மனைவி சாக்‌ஷி மகளுடன் ஆஜராகி விடுகிறார். ரோகித் சர்மா, ரஹானே, அஸ்வின், யுவராஜ்சிங், ஷிகர் தவான் உள்ளிட்டோரின் மனைவிகளும் தங்களது கணவன்மார்களின் ஆட்டங்களை நேரில் ரசித்து உற்சாகப்படுத்துகிறார்கள். விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா நேரம் கிடைத்தால் கணவரின் ஆட்டத்தை ‘மிஸ்’ செய்வதில்லை.

ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்லும் தங்களது துணையை அழைத்து வந்துள்ளனர். ஆக, இந்த தடவை வீரர்களின் மீதான ‘கண்காணிப்பு’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

கவனிக்கத்தக்க இன்னொரு நிகழ்வு உண்டு. அதிக பணத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் சிலர் சொதப்பி மதிப்பிழந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆம், ஏலத்தில் ரூ.12½ கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்), ரூ.11½ கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் (ராஜஸ்தான்) இதுவரை தங்களது ‘மதிப்பு’க்கு ஏற்ற வகையில் ஆடவில்லை என்ற கவலை நிச்சயம் சம்பந்தப்பட்ட அணிக்கு இருக்கும். பென் ஸ்டோக்ஸ் 6 ஆட்டங்களில் 147 ரன்கள் எடுத்துள்ளார். ஜெய்தேவ் உனட்கட் 6 ஆட்டங்களில் வெறும் 3 விக்கெட் மட்டுமே கைப்பற்றி ஓவருக்கு சராசரியாக 10.05 ரன்களை வாரி வழங்கி பெரும் வள்ளலாக பவனி வருகிறார். ரூ.7 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜாவால் (5 ஆட்டத்தில் 44 ரன் மற்றும் ஒரு விக்கெட்) பெரிய அளவில் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை.

மறுபுறம், குறைந்த தொகைக்கு விலை போன வீரர்கள் தூள்கிளப்புகிறார்கள். ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட மும்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே 10 விக்கெட்டுகளை சாய்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதே போல் பல அணிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு ரூ.2 கோடிக்கு மட்டுமே எடுக்கப்பட்ட பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் பட்டையை கிளப்புகிறார். ஒரு சதமும், 2 அரைசதமும் விளாசி தனது மதிப்பை உயர்த்தி இருக்கிறார். சிக்சர் மன்னனாகவும் திகழ்கிறார்.

சில குழப்பங்களும் நடந்திருக்கின்றன. மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட் செய்து கொண்டிருந்த போது, 18-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தில் உமேஷ் யாதவ் கேட்ச் ஆனார். நடுவருக்கு பவுலிங் செய்த பும்ரா நோ-பாலாக வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் வர, தொழில்நுட்பம் உதவி கோரப்பட்டது.

ஆனால் ரீப்ளேயில் இப்படியொரு குளறுபடியை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ரீப்ளேயில் பவுலிங் முனையில் விராட் கோலி இருக்க வேண்டும். ஆனால் அங்கும் உமேஷ் யாதவ் பேட்டுடன் நின்று கொண்டிருந்தார். ஒளிபரப்புதாரர்கள் தவறுதலாக குறிப்பிட்ட பந்தின் ரீப்ளேயை விடுத்து, வேறு பந்தின் ரீப்ளேயை காட்டியுள்ளனர். ஒரு சில நாட்கள் கழித்தே இந்த குழப்பம் வெளிச்சத்திற்கு வந்தது. அட இது என்ன உமேஷ் யாதவ் இரட்டைவேடமா என சமூக வலைத்தளவாசிகள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

இதே போல் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் கவனக்குறைவால் ராஜஸ்தான் பவுலர் பென் லாக்லின் ஒரு ஓவரில் 7 பந்துகளை வீசினார். நல்லவேளையாக இதில் ஐதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இழுபறியான போட்டியாக இருந்திருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீசிய விவகாரம் பூதாகர சர்ச்சையாக வெடித்திருக்கும்.

சில வீரர்களின் ஆட்டம், அணி மாறினால் வேகம் வருமோ? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. நடப்பு தொடரில் சதம் அடித்த கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), ஷேன் வாட்சன் (சென்னை), 14 பந்தில் அரைசதம் நொறுக்கிய லோகேஷ் ராகுல் (பஞ்சாப்) ஆகிய மூன்று பேரும் முன்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்காக ஆடியவர்கள்.

பெங்களூரு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதும் இவர்களுக்கு புதுவேகம் வந்து விட்டதோ? என்று ஜமாய்க்கிறார்கள், நெட்டிசன்கள்.

இன்னொரு விஷயம் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புது உற்சாகம் தருவதாக இருக்கிறது. ஆம், தற்போது வரை (நேற்று முன்தினம்) புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை வகிக்கும் அணிகளுக்கும் தமிழகத்துக்கும் இடையே பெரும் தொடர்பு இருக்கிறது.

இரண்டு அணிகளை தமிழர்கள் கேப்டனாக வழிநடத்துகிறார்கள். இன்னொரு அணி சென்னையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. மற்றொரு அணி தமிழரை உரிமையாளராக பெற்றுள்ளது.

பெரும்பாலும் சென்னை அணிக்கு தான் தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் உண்டு என்றாலும், இதர அணிகள் சிலவற்றுக்கும் தமிழ் ரசிகர்களின் ஏகோபத்திய ஆதரவு கிடைப்பது மறுப்பதற்கில்லை.

ஆக, இந்த பரபரப்பு, சுவாரஸ்யங்கள் எல்லாம் ஐ.பி.எல். கோப்பை யாருக்கு? என்ற முடிவு கிடைக்கும் வரை தொடரும் என்பது மட்டும் நிஜம்!

-ஜெய்பான் 

Next Story