நசரத்பேட்டையில் தொழிலாளி அடித்துக்கொலை மகன் கைது


நசரத்பேட்டையில் தொழிலாளி அடித்துக்கொலை மகன் கைது
x
தினத்தந்தி 29 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-30T00:23:40+05:30)

நசரத்பேட்டையில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர்தாங்கல், நேரு தெருவை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (22), மது குடிக்கும் பழக்கம் உடையவர். வீரராகவன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த வீரராகவன் மனைவி மற்றும் வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது கார்த்திக் தனது தந்தை வீரராகவனை சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து வீரராகவனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த வீரராகவனை வீட்டில் இருந்த குளியல் அறையில் வைத்து பூட்டி விட்டு கார்த்திக் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீரராகவன் இறந்து போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வீரராகவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story