மத்திய அதிவிரைவு படையினர் கும்பகோணம் வருகை பதற்றமான இடங்கள் குறித்து ஆய்வு


மத்திய அதிவிரைவு படையினர் கும்பகோணம் வருகை பதற்றமான இடங்கள் குறித்து ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-30T01:59:13+05:30)

டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அதிவிரைவு படையினர் கும்பகோணத்துக்கு வருகை தந்து, பதற்றமான இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணம்,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் நாளுக்குநாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அதிவிரைவு படையினர் நேற்று கும்பகோணம் வந்தனர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிவிரைவு படையினர் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்தும் ஊர்களுக்கு சென்று வருவதற்கான மாற்று பாதைகள் குறித்தும், பதற்றமான இடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிக்கான துணை போலீஸ் சூப்பிரண்டுகளையும் மத்திய அதிவிரைவு படையினர் சந்தித்து பேசினர். அப்போது அந்தந்த ஊர்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அதிவிரைவு படையினர் கேட்டறிந்தனர். இதுகுறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி நிருபர்களிடம் கூறியாதாவது.

மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவை சேர்ந்த அதிவிரைவு படை வீரர்கள் கும்பகோணம் வந்துள்ளனர். இவர்கள் கோவையில் உள்ள 105-வது படை பிரிவை சேர்ந்தவர்கள். உதவி கமாண்டர் வி.எப்.கிளாரன்ஸ் தலைமையில் 40 வீரர்கள் கும்பகோணத்துக்கு வந்து, பதற்றம் நிலவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை மாவட்டம் முழுவதும் அதிவிரைவு படையினர் ரோந்து பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story