நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்


நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 29 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-30T02:39:39+05:30)

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊட்டி,

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவர்கள் மலை மாவட்டமான நீலகிரியில் ரெயில் பாதை அமைக்க திட்டமிட்டனர். செங்குத்தான மலைப்பகுதிகள் இருந்ததால், ரெயில் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டு மலை ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

இதையடுத்து குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி மலை ரெயில் சேவை துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரெயில் பாதை மொத்தம் 46 கிலோ மீட்டர் ஆகும். இந்த பாதையில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்களை கடந்து மலை ரெயில் வருகிறது. இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் மூலமும், குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலமும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டிக்கு 11.50 மணிக்கு மலைரெயில் வந்தடைகிறது. மலை ரெயிலில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் ஊட்டி-குன்னூர் ஒரு நபருக்கு ரூ.10, ஊட்டி-மேட்டுப்பாளையம் ரூ.15, முன்பதிவு டிக்கெட்டுகள் ஊட்டி-குன்னூர் ஒரு நபருக்கு ரூ.25, ஊட்டி-மேட்டுப்பாளையம் ரூ.30 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5 பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளதுடன், 240 இருக்கைகள் உள்ளன.

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கி உள்ளது. தற்போது கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றனர். ஊட்டி ரெயில் நிலையத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுக்க சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மலை ரெயிலில் ஏற்றப்பட்டனர்.

இந்த மலை ரெயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் ஊட்டியின் இயற்கை அழகு, கேத்தி பள்ளத்தாக்கு, பசுமையான தேயிலை தோட்டங்கள், வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். மேலும் குகைகள் வழியாக மலை ரெயில் செல்லும் போது அவர்களுக்கு புதுவித அனுபவம் கிடைப்பதாக கூறுகின் றனர்.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மலை ரெயில் தண்ணீர் நிரப்புவதற்காக ஒருசில ரெயில் நிலையங்களில் நிற்கும். அப்போது, சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்கிறார்கள்.

மேலும் மலை ரெயில் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Next Story