பொள்ளாச்சி அருகே சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற அண்ணன்- தம்பி கைது


பொள்ளாச்சி அருகே சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற அண்ணன்- தம்பி கைது
x
தினத்தந்தி 29 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-30T02:39:44+05:30)

பொள்ளாச்சி அருகே சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற, அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வனசரகர் காசிலிங்கம் தலைமையிலான வனக்குழுவினர் கடந்த 16- ந் தேதி சேத்து மடை மேற்கு பிரிவு எட்டடி பாலம் சரக பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் இரண்டு காய்ந்த சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அதன்சுற்றுப் பகுதியில் மர்ம நபர்கள் யாராவது பதுங்கி இருக்கிறார்களா? எனசோதனை செய்தனர். அப்போது அங்குள்ள புதர் மறைவில் 38 கிலோ சந்தன மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். ஆனால், மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதையடுத்து சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்மநபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சர்க்கார்பதி பீடர் கானல் பகுதியில் வனசரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வழக்கம் போல் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 16 சந்தன மரத்துண்டுகள் (15 கிலோ) மற்றும் அரிவாள் ஒன்றும் பையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்த கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் (வயது 47), அவரது தம்பி முகமது ரியாஸ் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கார் மற்றும் சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் வனப்பகுதியில் 38 கிலோ சந்தன மரக்கட்டைகளை இருவரும் வெட்டி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரும் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story