முன்விரோதம் காரணமாக சரக்கு ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை


முன்விரோதம் காரணமாக சரக்கு ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 29 April 2018 10:15 PM GMT (Updated: 2018-04-30T02:55:05+05:30)

முத்தூரை அடுத்த நத்தக்காடையூர் அருகே முன் விரோதம் காரணமாக சரக்கு ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மன்றாடியார் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 46). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மகள் சத்தியப்பிரியா என்கிற மேகலாதேவி (19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சத்தியப்பிரியாவும், அதே ஊரை சேர்ந்த முருகன் என்கிற முருகேசன் (55) என்பவரின் மகன் கவுதமும் (23) காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள்.

இவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தாலும், சத்தியப்பிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது இல்லை என்று கூறப்படுகிறது. தான் பாசமாக வளர்த்த மகள் காதல் திருமணம் செய்த பிறகு வீட்டிற்கு வருவது இல்லையே என தங்கவேல் மன வேதனை அடைந்தார். இதற்கு முருகேசன்தான் காரணம் என தங்கவேல் கருதினார். எனவே முருகேசன் வீட்டிற்கு தங்கவேல் சென்று, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். தங்கவேல் வந்து தன்னுடைய வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தது முருகேசனுக்கு அவமானமாக இருந்தது. இந்த முன் விரோதம் காரணமாக தங்கவேலை தீர்த்துக்கட்ட முருகேசன் முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு நத்தக்காடையூரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தி இருந்த தனது சரக்கு ஆட்டோவினுள் தங்கவேல் அமர்ந்து இருந்தார். அப்போது ஆவேசத்துடன் அங்கு வந்த முருகேசன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால், தங்கவேலை குத்தினார். இதனால் உடலில் பல இடங்களில் கத்திக்குத்துப்பட்ட தங்கவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் முருகேசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து தங்கவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உறவினர் முருகேசனை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story