கங்கையை போல் தாமிரபரணியை சுத்தப்படுத்த நடவடிக்கை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


கங்கையை போல் தாமிரபரணியை சுத்தப்படுத்த நடவடிக்கை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 29 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-30T02:59:29+05:30)

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி கங்கை நதியை போல் தாமிரபரணியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நெல்லை,

நெல்லை தாமிரபரணி ஆற்றில் 144 வருடங்களுக்கு பிறகு வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தாமிரபரணி புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா அறிமுக கூட்டம் நெல்லை சந்திப்பு சங்கீதசபாவில் நேற்று நடந்தது. நடேசன் தலைமை தாங்கினார். அகில பாரத பிராமண சங்க தேசிய தலைவர் குளத்தூர் மணி முன்னிலை வகித்தார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தாமிரபரணி புஷ்கர விழா இணையதள முகவரி மற்றும் பாடல் சி.டி.க்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் பிரச்சினை உள்ள நதிகளை பற்றி தான் பேசுகிறார்கள். யாராவது தாமிரபரணி நதியை பற்றி பேசுகிறார்களா? என்றால் இல்லை. தாமிரபரணி ஆறு தற்போது மாசுபட்டு வருகிறது. அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை ஆகும். தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியை பாதுகாக்கவேண்டும். கங்கை-காவிரியை இணைக்க வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டம் அறிவித்தார். அப்போது அதனுடன் தாமிரபரணியையும் இணைக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் உள்ள 111 நதிகளில் நீர்வழி போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று அறிவித்தார். அதில் தாமிரபரணியையும் சேர்க்க ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. கங்கை நதியை சுத்தம் செய்வது போல் தாமிரபரணியையும் சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு தாமிரபரணி நதி ஓடுகிறது. எங்கே ஓடினாலும் தாமிரபரணி ஜீவநதியாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையை தமிழகத்தில் அரசியலாக்கி விட்டனர். இதுகுறித்து மக்களிடம் தவறான புரிதலையும் ஏற்படுத்தி வருகிறார்கள். 50 ஆண்டுளாக உள்ள காவிரி பிரச்சினைக்கு பிரதமர் மோடி நிரந்தர தீர்வு காண முயற்சி எடுத்து வருகிறார். தமிழகத்தில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு பா.ஜனதாவை குறை கூறுவதற்காக சிலர் உள்ளனர். கோவில்களில் உள்ள ஆகமவிதிகளை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். கோவில் புனிதமான இடம், அங்கே உள்ள புனிதத்தை யாரும் கெடுக்கக்கூடாது‘ என்றார்.

விழாவில், சாரதா கல்லூரி பக்தானந்தா மகராஜ் சுவாமிகள், சங்கரன்கோவில் ராகவானந்தா சுவாமிகள், டாக்டர் பத்ரிநாராயணன், வெங்கட்ராமன், சங்கரநாராயணன், பிரியா, பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து முன்னணி வக்கீல் குற்றாலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story