பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 April 2018 10:15 PM GMT (Updated: 29 April 2018 9:38 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

பவானிசாகர்,

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 2-வது பெரிய நீர்த்தேக்கமாக பவானிசாகர் அணை உள்ளது. இது தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி. இதில் சேறும் சகதியும் 15 அடி கழித்தது போக அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகு புன்செய் பாசனத்திற்கு இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பாசனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் கிணறு உள்ளிட்ட நீராதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வந்தனர். கடுமையான வறட்சியால் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் சிறப்பு நனைப்பிற்கு கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்கள்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது அதன்பேரில் நேற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனப்பகுதிக்கு சிறப்பு நனைப்பிற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பவானிசாகர் தொகுதி ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கீழ்பவானி வாய்க்கால் மதகுகளில் சிறப்பு பூஜை செய்து தண்ணீரை திறந்துவிட்டார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது, ‘வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். முதல் 4 நாட்களுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், அடுத்து வரும் 6 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்’. என்றனர்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 55.29 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 262 கன அடி தண்ணீர் வருகிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு 1000 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Next Story