திராவிட பூமியான தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது நெல்லையில் வைகோ பேட்டி


திராவிட பூமியான தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது நெல்லையில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 29 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-30T03:32:15+05:30)

நெல்லையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நெல்லை,

என்மீது கல்வீசிய சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தெரியும் என்று நான் ஒரு போதும் கூறவில்லை.

நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட போது நான் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். பாரதீய ஜனதா தலைவர்களின் ஒருவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். 3 மாதத்துக்கு ஒருமுறை நான் அவரை சென்று பார்த்து வருகிறேன். பாரதீய ஜனதா தலைவர்களை எனக்கு நன்கு தெரியும். கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து பிரசாரம் செய்தேன்.

வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் மோடி அரசு பதவி ஏற்பு விழாவுக்கு, அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து எங்கள் நெஞ்சில் வேல் பாய்த்து விட்டனர். அதனால் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். மோடி அரசு தமிழகத்துக்கு ஒருபோதும் நல்ல திட்டங்களை செய்யாது.

மோடி ஆட்சியில் இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார். அவர் கர்நாடகாவுக்கு நன்மை செய்வது மட்டுமல்லாமல் தஞ்சை பூமியை பாலைவனமாக்கி ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றார்.

தமிழகத்துக்கு கேடு செய்யும் அரசுதான் மோடி அரசு. தமிழகம் சகோதரத்துவம், மதச்சார்பின்மை கொண்ட மாநிலம் ஆகும். இங்கு மத அடிப்படையில் யாரும் பிரிவினையை உருவாக்க முடியாது. மதவாத சக்திகள், இந்துத்துவா சக்திகள் திராவிட பூமியான தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது. அதன் அடிப்படையில் செயல்படும் பாரதீய ஜனதா தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது. அவ்வாறு காலூன்றவும் விடமாட்டோம்.

இந்த பணியை செய்வதற்கு தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். இது பெரியார், அண்ணா வாழ்ந்த திராவிட பூமி ஆகும். இதை மதவாத பிடியில் சிக்காமல் பாதுகாப்போம். இவ்வாறு வைகோ கூறினார்.

பேட்டியின் போது நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, தொழிலதிபர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story