பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 11 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்


பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 11 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
x

பரோலில் வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

சிக்கமகளூரு, 

பரோலில் வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதி

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கார்கல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கனி. சம்பவத்தன்று இவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் அப்துல் கனியின் மனைவி உடல்கருகி பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் கார்கல் போலீசார் அப்துல் கனியை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அப்துல் கனிக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து அப்துல் கனி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2005-ம் ஆண்டு நடந்தது. இந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சோலாப்புரா கிராமத்தில் நடந்த தனது தங்கையின் திருமணத்திற்காக அப்துல் கனி 14 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் பரோல் காலம் முடிவடைந்து மீண்டும் அவர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து சிறை அதிகாரிகள் அஜ்ஜாம்புரா போலீசில் அப்துல் கனியை கண்டுபிடித்து தர புகார் அளித்தனர்.

பெயரை மாற்றி வைத்து...

ஆனால், அப்துல் கனி போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் அஜ்ஜாம்புரா போலீசில், பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தனிப்படை அமைத்து அப்துல் கனியை பிடிக்க நடவடிக்கை எடுத்தார். தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அப்துல் கனியை வலைவீசி தேடினர். இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சகில் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் மனைவியை கொன்று ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாகி இருந்த அப்துல் கனி தான் உப்பினங்கடியில் சகில் என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டு வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்துல் கனியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பரோல் நாட்கள் முடிந்ததும் சிறைக்கு திரும்பாமல் உப்பினங்கடிக்கு வந்து சகில் என்ற பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

11 ஆண்டுகளுக்கு பிறகு...

மேலும் அவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அப்துல் கனியை கைது செய்து மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

பரோலில், சிறையில் இருந்து வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story