கிருஷ்ணகிரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்கள்


கிருஷ்ணகிரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்கள்
x
தினத்தந்தி 29 April 2018 10:16 PM GMT (Updated: 29 April 2018 10:16 PM GMT)

கிருஷ்ணகிரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 2 மையங்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழையபேட்டை பஸ் நிலையம் மற்றும் அண்ணா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்கள் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையங்களை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழையபேட்டை பஸ் நிலையத்தில் ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலும், அண்ணா நகரில் ரூ.14 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.32 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3 விதமான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முதலாவதாக 1 ரூபாய் நாணயம் செலுத்தி ஒரு லிட்டர் குடிநீரும், 2 ரூபாய் நாணயம் செலுத்தி 2 லிட்டர் குடிநீரும், 5 ரூபாய் நாணயம் செலுத்தி 20 லிட்டர் குடிநீரும் பெற்று பயன்பெறலாம்.

இந்த மையங்களில் 500 எல்.பி.எம். கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பெறும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து அமைக் கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்தநிகழ்ச்சிகளில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், உதவி பொறியாளர் கிஷோர்குமார், நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்து, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story