தேசியவாத காங்கிரஸ் தலைவராக 7-வது முறையாக சரத்பவார் தேர்வு மராட்டிய தலைவராகிறார் ஜெயந்த் பாட்டீல்


தேசியவாத காங்கிரஸ் தலைவராக 7-வது முறையாக சரத்பவார் தேர்வு மராட்டிய தலைவராகிறார் ஜெயந்த் பாட்டீல்
x
தினத்தந்தி 29 April 2018 11:15 PM GMT (Updated: 29 April 2018 10:17 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக 7-வது முறையாக சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயந்த் பாட்டீல் கட்சியின் மராட்டிய தலைவராகிறார்.

புனே, 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக 7-வது முறையாக சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயந்த் பாட்டீல் கட்சியின் மராட்டிய தலைவராகிறார்.

7-வது முறையாக தேர்வு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து 7-வது முறையாக கட்சி நிறுவனரான சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பாக கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி தலைவர் டி.பி.பீத்தாம்பரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு சரத் பவாரை பரிந்துரைத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து 15 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கட்சியின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வருகிற 2020-ம் ஆண்டு வரை தேசிய தலைவராக நீடிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ள கட்சி மாநாட்டில் சரத் பவாரின் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

ஜெயந்த் பாட்டீல்

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான சுனில் தத்காரேயின் பதவிக்காலமும் நிறைவடைந்தது.

இந்தநிலையில் மராட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஜெயந்த் பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டார். புனேயில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சியின் தேர்தல் அலுவலர் திலிப் வால்சே பாட்டீல் தெரிவித்தார்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக...

சரத் பவாரின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் ஜெயந்த் பாட்டீல், மராட்டிய நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல்கள் வர இருக்கும் நிலையில் ஜெயந்த் பாட்டீலின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story