சேலம்-சென்னை 8 வழி சாலை அமைக்க எதிர்ப்பு: மாடுகளுடன் வந்து பொதுமக்கள் மறியல்


சேலம்-சென்னை 8 வழி சாலை அமைக்க எதிர்ப்பு: மாடுகளுடன் வந்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 29 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-30T03:55:42+05:30)

சேலம்-சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் மாடுகளுடன் வந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பசுமை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாடுகளை அழைத்து வந்து சேலம்-உளுந்தூர்பேட்டை பைபாஸ் எருமாபாளையம் பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்களிடம் நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த மக்கள், அதிகாரிகள் உடனடியாக இங்கு வர வேண்டும் என்றும், சேலம்-சென்னை 8 வழி சாலை அமைக்கும் பணியை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் சமாதானம் அடைந்த அவர்கள் மாடு, ஏர் கலப்பைகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள் கூறியதாவது:-

எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாய தொழில் தான் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்த பயனும் இல்லை. எனவே இதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story