கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 April 2018 10:30 PM GMT (Updated: 29 April 2018 10:29 PM GMT)

கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை, 

கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பழக்கடைகளில் சோதனை

மாம்பழ சீசனையொட்டி மும்பை மற்றும் நவிமும்பை மார்க்கெட்டுக்கு பல்வேறு வகையான மாங்காய்கள் வருகின்றன. இவற்றை கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செம்பூர் ப்ரூட் கள்ளி மற்றும் வாஷி ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

109 டஜன் மாம்பழம் பறிமுதல்

அப்போது பெரும்பாலான கடைகளில் கால்ஷியம் கார்பைடு கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கார்பைடு கற்கள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உதவியுடன் பழுக்க வைக்கப்பட்ட 109 டஜன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த பழங்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், வேதிப்பொருள் தன்மை மிகவும் அதிகமாக இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் இரண்டு மாதங்களுக்கு இந்த சோதனை நடைபெறும் என்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை கமிஷனர் சைலேஷ் யாதவ் கூறினார்.

Next Story