மாவட்டம் முழுவதும் 40 மதுக்கடைகள் மூடப்பட்டன


மாவட்டம் முழுவதும் 40 மதுக்கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 29 April 2018 10:47 PM GMT (Updated: 29 April 2018 10:47 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத பகுதியில் இருந்த 40 மதுபான கடைகள் மூடப்பட்டன.

நாமக்கல்,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத பகுதியில் இருந்த மொத்தம் 40 மதுக்கடைகள் மூடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 178 மதுபான கடைகள் இயங்கி வந்தன. அவற்றில் நகராட்சி பகுதியில் 35 கடைகள், பேரூராட்சி பகுதியில் 5 கடைகள் என 40 மதுக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

நாமக்கல் நகரில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டதால், இந்த கடைகளுக்கு வந்த குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது.

இதற்கிடையே நேற்று நாமக்கல்லுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. வக்கீல் பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுபான கடைகளை மூட மறுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், ஐகோர்ட்டு தீர்ப்பு மீது எந்த உத்தரவும் வழங்க கூடாது என பா.ம.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Next Story