போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற்றவர் மீது வழக்கு


போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற்றவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 April 2018 10:55 PM GMT (Updated: 2018-04-30T04:25:43+05:30)

ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட்டு பெற்றவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் பகுதியை சேர்ந்த கருங்கு என்பவருடைய மகன் கணேசன்(வயது42). கூலித்தொழில் செய்து வந்த கணேசன் வெளிநாடு செல்ல கடந்த ஆண்டு பாஸ்போர்ட்டு கோரி விண்ணப்பித்து இருந்தார். இவருடைய விண்ணபத்தை பரிசீலணை செய்து ஆவணங்களை ஆய்வு செய்தபோது இவரின் வீட்டு முகவரியிலும், இவரின் பெயரிலும் ஏற்கனவே பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கணேசனின் ஆவணங்களையும், ஏற்கனவே வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுக்கான ஆவணங்களையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது அதேபகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கவேல் என்பவர் அந்த பாஸ்போர்ட்டை போலி ஆவணம் மூலம் பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட தங்கவேல் கடந்த 1997-ம் ஆண்டு கணேசனின் தாயாரிடம் ரேஷன்கார்டினை வாங்கி சென்று அதனை பயன்படுத்தி ஏஜென்டு மூலம் பாஸ்போர்ட்டு பெற்றது விசாரணையில் தெரிந்தது.

இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்றிருந்த தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் விடுமுறையில் வந்துவிட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் தனது உண்மையான பெயரை கூறி சிக்கி கொண்டாராம். இதனால் அவருடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை செய்து வந்துனர்.

இந்நிலையில்தான் கணேசன் பாஸ்போர்ட்டு கோரி விண்ணப்பித்தபோது தங்கவேலின் மோசடி வெளியில் தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து கணேசன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story