பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பந்தல் அமைக்க சென்றபோது தாறுமாறாக ஓடிய மினி லாரி கவிழ்ந்து 3 தொழிலாளிகள் பலி


பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பந்தல் அமைக்க சென்றபோது தாறுமாறாக ஓடிய மினி லாரி கவிழ்ந்து 3 தொழிலாளிகள் பலி
x
தினத்தந்தி 29 April 2018 11:30 PM GMT (Updated: 29 April 2018 10:56 PM GMT)

பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பந்தல் அமைக்க சென்றபோது தாறுமாறாக ஓடிய மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளிகள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மங்களூரு, 

பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பந்தல் அமைக்க சென்றபோது தாறுமாறாக ஓடிய மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளிகள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பந்தல் அமைக்கும் தொழிலாளிகள்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உடுப்பி மாவட்டத்திற்கு நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். அப்போது அவர் உடுப்பி டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலையில் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருந்து 10 தொழிலாளர்கள், பந்தல் அமைப்பதற்காக மரச்சாமான்கள் மற்றும் பொருட்களை ஒரு மினி லாரியில் ஏற்றிக்கொண்டு உடுப்பிக்கு புறப்பட்டனர்.

அவர்கள் உடுப்பி மாவட்டம் ஹிரியடுக்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெரடூர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தாறுமாறாக ஓடி சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 9 பேரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

3 பேர் பலி

இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுப்பி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 2 தொழிலாளிகள் பலியாகி விட்டனர். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

மீதமுள்ள 7 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹிரியடுக்கா போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் பலியானவர்கள் அசாம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால் அவர்களுடைய பெயர் விவரங்கள் தெரியவில்லை.

சோகம்

இதையடுத்து போலீசார் விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story