புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன


புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 29 April 2018 11:11 PM GMT (Updated: 2018-04-30T04:41:46+05:30)

தமிழக அரசின் நடவடிக்கையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன.

புதுக்கோட்டை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 90 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யாமல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகள் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி திறக்கப்பட்டன.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 126 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். அதுபோல வகை மாற்றம் செய்யாமல் இனி புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து தீர்ப்பு அளித்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை வகை மாற்றம் செய்யாமல், திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதில் புதுக்கோட்டை சாந்தநாதபுரம், டி.வி.எஸ். கார்னர், சந்தைபேட்டை, பழனியப்பா கார்னர், திருவப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 6 டாஸ்மாக் கடைகளும், அறந்தாங்கி பகுதியில் 10 டாஸ்மாக் கடைகள், கீரனூரில் 3 டாஸ்மாக் கடைகள், கீரமங்கலத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் ஆலங்குடியில் ஒரு டாஸ்மாக் கடை என 22 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன.

இந்த டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் அதிகாரிகள் லாரிகளில் ஏற்றி டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு சென்று இறக்கி வைத்து உள்ளனர். 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறப்பதற்கான முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஐகோர்ட்டு தீர்ப்பால் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது ஒரு டாஸ்மாக் கடை கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story