கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்


கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 29 April 2018 11:45 PM GMT (Updated: 2018-04-30T04:49:29+05:30)

சித்ரா பவுர்ணமியான நேற்று கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி, 

ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகியது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது

இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும். ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது.

இதனால் இந்த அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரியில் நேற்று காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடினார்கள். மாலை 6.20 மணிக்கு சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலத்துடன் பந்து போன்ற மஞ்சள் நிறத்துடன் மறைந்தது. அந்த சமயத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் எழும்பி வந்தது.

அப்போது கடலின் மேல்பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தால் பளிச்பளிச் என்று மின்னியது. இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இது தவிர கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன்குன்றத்தில் இருந்தும் ஏராளமானோர் இந்த அபூர்வ காட்சியை கண்டு ரசித்தனர்.

Next Story