இன்னுயிரை இழக்கலாமா?


இன்னுயிரை இழக்கலாமா?
x
தினத்தந்தி 30 April 2018 10:22 AM GMT (Updated: 30 April 2018 10:22 AM GMT)

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதத்தை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ன்றைய அறிவியல் உலகில் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருந்தால் மட்டுமே செல்போன்கள் நிசப்தமாக இருக்கின்றன. மற்ற நேரங்களில் அதன் ஆர்ப்பரிப்புக்கு அளவே இல்லை. ஏனென்றால், நின்றால், நடந்தால், தூங்கினால், தூங்கி எழுந்தால் என எப்போதும் நாம் செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். பயன்படுத்தக்கூடாத இடங்களிலும், நேரங்களிலும் செல்போனை நாம் பயன்படுத்த தவறுவதில்லை. இதனால் விபரீதம் ஏற்படும் என்றும் அறிந்தும் அதை நாம் பெரிதுபடுத்துவதில்லை. குறிப்பாக, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்பது நமக்கும் தெரியும். பேசினால் விபத்து ஏற்படும் என்பதையும் அறிவோம். செல்போனில் வாகனம் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்று. ஆனால் நாம் எப்போதும் இதை கடைபிடிப்பது இல்லை. ஒரு நிமிடம் வாகனத்தை சாலையோரம் நிறுத்துவிட்டு பேசினால் என்ன? என்று என்றைக்கும் யோசிப்பது கிடையாது. ஒரு கையில் வாகனத்தை செலுத்திக்கொண்டே மற்றொரு கையை பயன்படுத்தி செல்போனில் பேசுகிறோம்.

இதனால் ஏற்படும் விபரீதம் உயிரை விலை கேட்கிறது. நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் பிறர் உயிரையும் சில நேரம் காவு வாங்கிவிடும். கனரக வாகனங்களில் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக விபத்து நேர்ந்தால், வாகனத்தில் பயணம் செய்வோரும் உயிரை விடும் நிலை ஏற்படும். சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேட் இல்லாத பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் டிரைவரால் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் அவர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதுதான். அவரால் அப்பாவி குழந்தைகளும் உயிரை இழந்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சாலை விபத்து அறிக்கையின்படி, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதால் மட்டும் நாடு முழுவதும் 4,976 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 2,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4,746 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எனவே செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதத்தை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யாராவது செல்போனில் அழைத்தால் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசுங்கள். நம் உயிரை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை.

-வக்கீல் நாராயணக்குமார் 

Next Story