கூட்டுறவு சங்க 4-ம் கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது


கூட்டுறவு சங்க 4-ம் கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 1 May 2018 4:00 AM IST (Updated: 1 May 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க 4-ம் கட்ட தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் தொடங்கியது

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 4-ம் கட்டமாக 173 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் 624 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 4 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 2-ந் தேதி 173 கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்ட தேர்தலும், கடந்த 7-ந் தேதி 142 சங்கங்களுக்கு 2-ம் கட்ட தேர்தலும் நடந்தது. 3-ம் கட்டமாக தேர்தல் கடந்த 16-ந் தேதி நடக்க இருந்தது. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு 3, 4-ம் கட்ட தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த மதுரை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கியது. கடந்த 27-ந் தேதி பாளையங்கோட்டை நகர கூட்டுறவு வங்கி, சுத்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, சந்திப்பு பாலகம், கங்கைகொண்டான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு 3-ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் பாளையங்கோட்டை நகர கூட்டுறவு வங்கி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை மட்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நெல்லை வண்ணார்பேட்டை கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், போக்குவரத்து கழக தொழிற்சங்கம், வீட்டுவசதி கடன் சங்கம், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி கூட்டுறவு பண்டகசாலை, களக்காடு பால் உற்பத்தியாளர் சங்கம், கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், மீன்வள சங்கங்கள் உள்ளிட்ட 173 சங்கங்களுக்கு வேட்புமனு தாக்கல் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

Next Story