நாங்குநேரி-கடையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை


நாங்குநேரி-கடையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 May 2018 4:30 AM IST (Updated: 1 May 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை,

நாங்குநேரி-கடையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட 2 மதுக்கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம், 2 கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டரிடம் அலுவலக நுழைவு வாயிலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அந்த ஊர் மக்கள் சார்பில் பிரமுகர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் ஊரில் விவசாய வேலையும், கூலி வேலையும் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இங்கு பள்ளிக்கூடம் செல்லும் ரோட்டில் புதிதாக ஒரு மதுக் கடை (டாஸ்மாக்) திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த கடையை மூட உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இதே போன்று கடையம் அருகே உள்ள அகம்பிள்ளைகுளம் கிராம மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடையம்- மந்தியூர் மெயின்ரோட்டில் புதிதாக ஒரு மதுக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதே இடத்தில் கடந்த ஆண்டு மதுக்கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மந்தியூர், அகம்பிள்ளைகுளம், பிள்ளை குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. அந்த கடையும் மூடப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் மதுக் கடை திறக்கப்பட்டு உள்ளது. அந்த கடையை மூட உத்தரவிட வேண்டும்.

எங்கள் ஊரில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் கலப்பதால் குடிநீர் மாசுபடுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story