தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம், மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம், மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 1 May 2018 5:00 AM IST (Updated: 1 May 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம், மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அந்த ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த அப்துல்ஜப்பார், ஜெபசிங், உஸ்மான்கான், பிரிட்டோ, அலாவுதீன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் புகையால் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

புளியங்குடியை சேர்ந்த நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. சேகரகுரு ராஜ்குமார் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “புளியங்குடி தூய மத்தியாவின் ஆலயத்தில் ராஜ்குமார் பொறுப்பேற்க சென்றார். அப்போது அவரை 2 பேர் அவதூறாக பேசி மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

சட்ட பஞ்சாயத்து இயக்க நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சுக்கூர் ரகுமான் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சி.பி. எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களும் 25 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

ராமநதி வடகால், தென்கால், பாப்பன்கால் பாசன விவசாயிகள் கொடுத்த மனுவில், “கடையம் யூனியனுக்கு உட்பட்ட கீழக்கடையம், மேலக்கடையம், தெற்கு கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தப்பேரி, மந்தியூர், ராஜாங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் ராமநதி அணை மூலம் பாசனம் பெறுகின்றன. சுமார் 1000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தொடர்ந்து மழை பெய்தாலும் ராமநதி முழு கொள்ளளவை எட்டுவது இல்லை. அதனால் அணையில் இருந்து மேல்மட்ட கால்வாய் அமைத்தால், விவசாயிகள் பயன் பெறமுடியாதநிலை உருவாகும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும். எனவே ராமநதி அணையை தூர்வார வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலப்பாளையம் ஆமீன்புரம், வி.எஸ்.டி.பள்ளி வாசல் தெருவை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே அனுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து இலவச பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

Next Story