தடுப்பு சுவரில் மோதி விபத்து கார் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் போராடி மீட்பு


தடுப்பு சுவரில் மோதி விபத்து கார் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் போராடி மீட்பு
x
தினத்தந்தி 1 May 2018 4:00 AM IST (Updated: 1 May 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பு சுவரில் மோதிய கார், சாலையின் மறுபக்கம் பாய்ந்து, எதிரே வந்த லாரியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவர், தன்னுடைய மகன் நந்தப்பிரியன் (வயது 7), கார்த்திக் ஆகியோருடன் காரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, அதே வேகத்தில் சாலையின் மறுபக்கத்துக்கு பாய்ந்தது.

அப்போது அந்த சாலையில் எதிரில் வந்துகொண்டிருந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு லாரி மீது மோதியது. இதில் லாரியில் சிக்கிக்கொண்ட கார், சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காரில் இருந்து சிவலிங்கம், கார்த்திக் ஆகியோரை மீட்டனர்.

ஆனால் காரின் முன் பகுதியில் அமர்ந்து இருந்த சிறுவன் நந்தப்பிரியன், காரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினான். இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவனை மீட்க போராடினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானியும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிறுவனை மீட்க களம் இறங்கினார். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ குழுவும் வரவழைக்கப்பட்டது.

நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு நந்தப்பிரியனை காரின் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். பின்னர் அவனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய சிறுவனை மீட்க களம் இறங்கிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியையும், போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story