செல்போன் வாங்கித்தர தாய் மறுத்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போன் வாங்கித்தர தாய் மறுத்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2018 4:15 AM IST (Updated: 1 May 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் வாங்கித்தர தாய் மறுத்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி அம்பிகா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வி. பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஆதித்யா(வயது 16) என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

ஆதித்யா சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிவிட்டு தற்போது மறைமலைநகரில் உள்ள கார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

ஆதித்யா அடிக்கடி தனது தாய் செல்வியிடம் செல்போன் வாங்கித்தர வேண்டும் என்று வற்புறுத்தி, அவரை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

நேற்று காலை வழக்கம்போல் செல்வி பூ வியாபாரம் செய்ய புறப்பட்டார். அப்போது ஆதித்யா, செல்போன் வாங்கித்தரும்படி தாயிடம் கேட்டார். அதற்கு செல்வி, ஆதித்யாவை திட்டிவிட்டு செல்போன் வாங்கித்தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டு பூ வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் மகள் கீர்த்தனாவும் இருந்தார்.

இதில் மனம் உடைந்த ஆதித்யா, வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்த கீர்த்தனா, தனது தாய்க்கு தகவல் கொடுத்தார். உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்த செல்வி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய தனது மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆதித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story