பழைய இடத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்


பழைய இடத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்
x
தினத்தந்தி 1 May 2018 4:00 AM IST (Updated: 1 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பழைய இடத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்கக்கோரி ஊட்டி நகராட்சி அலுவலகத்தை நடைபாதை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கிறார்கள். இந்தநிலையில், தாவரவியல் பூங்காவின் முன்பகுதியில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதன்பேரில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அதிரடியாக அகற்றினார். மேலும் அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் மீண்டும் கடை வைக்க அனுமதி வழங்கக்கோரி நடைபாதை வியாபாரிகள் ஊட்டி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானம் அடையாத வியாபாரிகள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் கூறியதாவது:- சீசன் காலத்தில் மட்டுமே கடைகளில் வியாபாரம் நடக்கிறது. இந்தநிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் இருப்பதாக கூறி எங்களது கடைகளை அதிகாரிகள் அகற்றினர். தாவரவியல் பூங்கா அருகே உள்ள வாகன நிறுத்தம் பகுதியில் எங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் போதிய அளவு வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

எனவே, பழைய இடத்தில் கடைகள் வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story