குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் கைது


குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 May 2018 3:45 AM IST (Updated: 1 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதன்பேரில் குன்னூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் குன்னூர் லெவல் கிராசிங்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர், தூதூர்மட்டத்தை சேர்ந்த தியாகு (வயது 27) என்பதும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாலிபரை எச்சரிக்கை செய்த போலீசார் நாளை (இன்று) குன்னூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை பெற்று செல்லுமாறு அறிவுரை வழங்கினர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் குன்னூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை போலீசார் வந்து பார்த்தபோது அந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூதூர்மட்டத்தை சேர்ந்த தியாகு தனது மோட்டார் சைக்கிளை போலீசாருக்கு தெரியாமல் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story