வத்தலக்குண்டுவில் தேர்தல் அதிகாரி காருடன் சிறைபிடிப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்


வத்தலக்குண்டுவில் தேர்தல் அதிகாரி காருடன் சிறைபிடிப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 1 May 2018 4:15 AM IST (Updated: 1 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில் வங்கி உறுப்பினர்களை போலியாக சேர்த்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியை காருடன் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை, வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி, விராலிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விருவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றிற்கான தேர்தலுக்கு நேற்றுவேட்பு மனு தாக்கல் நடந்தது. அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். விடுதலைசிறுத்தைகள் கட்சி நில உரிமை மீட்பு மாநில துணைபொதுச்செயலாளர் உலகநம்பி வத்தலக்குண்டு கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று அங்கு சென்றார். அவருடன் அவரது தம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளருமான திருமாசெழியனும் சென்றார்.

உலகநம்பி அங்கிருந்த வங்கி உறுப்பினர்கள் பெயர் பட்டியலை பார்த்தார். அப்போது அவரது தம்பி திருமாசெழியன் மற்றும் பெத்தானியபுரத்தை சேர்ந்த 250 பேரின் பெயர்கள் அவர்களுக்கு தெரியாமலே போலியாக 2013-ம் ஆண்டு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் தேர்தல் அதிகாரி சவுந்தரராஜனிடம் விளக்கம் கேட்டனர். அவர் மாவட்ட தேர்தல்அதிகாரி மணிகண்டன் கூட்டுறவு பண்டகசாலைக்கு வந்துள்ளார். அவரிடம் கேளுங்கள் என்று கூறினார். இதையடுத்து உலகநம்பி மாவட்ட தேர்தல் அதிகாரி இருந்த கூட்டுறவு பண்டகசாலைக்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்தார்,

பின்னர் மாவட்ட தேர்தல்அதிகாரி மணிகண்டன் அவர்களிடம் புகார் மனு வாங்கி கொண்டு காரில் ஏறி புறப்பட முயன்றார். அப்போது உலகநம்பி மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் காரின் முன்பு உட்கார்ந்து மறியல் போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் தேர்தல் நடக்கும் 7-ந் தேதிக்கு முன்னர் போலியான உறுப்பினர் பெயர்களை நீக்க வேண்டும் என்பதற்கு உறுதி மொழி எழுதி தரவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கூறினர். அதற்கு அவர் மேலதிகாரியிடம் சொல்லி விரைவான நடவடிக்கை எடுக்க சொல்கிறேன், எழுதி தர முடியாது என்று கூறினார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை காருடன் வைத்து சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பிற்பகல் 4 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர். 

Next Story