வேட்புமனு தாக்கலின் போது மோதல்: 2 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஒத்திவைப்பு


வேட்புமனு தாக்கலின் போது மோதல்: 2 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 1 May 2018 4:30 AM IST (Updated: 1 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு தாக்கலின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக 2 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. நாற்காலிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே எண்டப்புளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் இயக்குனர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் நடந்தது. அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். மேலும் இரு தரப்பினரும் வேட்புமனுக்களை கிழித்து எறிந்தனர். மேலும் சங்க வளாகத்தில் கிடந்த நாற்காலிகளை உடைத்தனர். சங்க பலகையின் மீதும் கல்வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரியகுளம் போலீசார், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று நடந்தது. இதில் அ.ம.மு.க.வினர் 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்ய அலுவலகத்துக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 8 பேர் அலுவலகத்துக்குள் சென்றனர். இதனால் ஒவ்வொருவராக வருமாறு தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அ.ம.மு.க.வினர், செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், வேட்பு மனுக்களை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். அங்கு கிடந்த நாற்காலியையும் உடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதற்கிடையே, அசாதாரண சூழல் நிலவுவதால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ஆண்டிப்பட்டி, கன்னியப்பபிள்ளை பட்டி, கதிர்நரசிங்கபுரம், எம்.சுப்புலாபுரம், அனுப்பபட்டி, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நடந்தது. இதில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வை சேர்ந்த 400-க் கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

எம்.சுப்புலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 11 இயக்குனர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. சார்பில் 11 பேரும், தி.மு.க. சார்பில் 16 பேரும், அ.ம.மு.க. சார்பில் 23 பேரும், விவசாய சங்கத்தை சேர்ந்த 37 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் வேட்பு மனுதாக்கல் செய்ய வருவதுபோல சிலர் சங்க அலுவலகத்துக்குள் நுழைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள், மேஜையில் இருந்த வேட்பு மனுக்களை கிழித்து எறிந்தனர். இதனையடுத்து எம்.சுப்புலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். 

Next Story