தஞ்சை அருகே பவனமங்கலத்தில் காவிரி ஆற்றில் மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


தஞ்சை அருகே பவனமங்கலத்தில் காவிரி ஆற்றில் மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 May 2018 4:30 AM IST (Updated: 1 May 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே பவனமங்கலத்தில் காவிரி ஆற்றில் மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே பவனமங்கலத்தில் காவிரி ஆற்றில் மணல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். மேலும் வேங்குராயன்குடிக்காட்டில் மதுக்கடை திறக்கக்கூடாது எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பாலகணேசன் என்பவரது தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யப்பன், செங்குட்டுவன், நடராஜன் மற்றும் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதி கிராமங்களுக்கு உயிர்நாடியாக விளங்குவது காவிரி ஆறு ஆகும். விவசாயம் மற்றும் குடிநீருக்கு காவிரி நீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதில் பவனமங்கலம் கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றுப்பாசனமே இல்லை. அங்கு நூற்றுக்கணக்கான பம்புசெட்டுகள் மூலமே விவசாயம் நடைபெற்று வருகிறது.

பவனமங்கலம் கிராமத்தின் நிலப்பகுதி மட்டத்தை விட ஆற்றின் மட்டம் பள்ளமாக இருப்பதால் பவனமங்கலம் கிராமத்திற்கு ஆற்றில் இருந்து நேராக தண்ணீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்படவில்லை. காவிரி ஆற்றுப்பாலத்திற்கு மேற்கே புதுச்சத்திரம் கிராமத்தில் தான் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பவனமங்கலத்தில் காவிரி ஆற்றில் மணல்குவாரி அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவ்வாறு மணல் குவாரி அமைத்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து குடிநீர் பாதிப்பும் ஏற்படும். எனவே மணல்குவாரி அமைக்காமல் விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் காக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

இதே போல் வேங்குராயன்குடிக்காடு, கொ.வல்லுண்டான்பட்டு, நா.வல்லுண்டான்பட்டு, அதினாம்பட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காடு பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதற்கு 5 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடை மூடப்பட்டது. இந்த நிலையில் மூடப்பட்ட இடத்தில் மீண்டும் கடையை திறக்கப்போவதாக கூறுகிறார்கள். சிலர் வேண்டும்மென்றே மதுக்கடைக்கு ஆதரவு தெரிவிப்பதாக மனு கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் மதுக்கடை திறப்பதை நிறுத்த வேண்டும். அந்த இடத்தில் மதுக்கடையை திறந்தால் 5 கிராமங்களை சேர்ந்த மக்களும் போராட்டம் நடத்துவோம். எனவே கலெக்டர் பரிசீலனை செய்து டாஸ்மாக் கடையை திறப்பதை நிறுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Next Story